பதிவு செய்த நாள்
04
ஜூன்
2016
12:06
சென்னை: சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளின், சென்னை வீட்டில், நான்காவது நாளாக போலீசார், ஜூன்., 3 ம் தேதி நடத்திய சோதனையில், நான்கு ஐம்பொன் சிலைகள் மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட, மூன்று சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, ஆழ்வார்பேட்டை, ‘முர்ரேஸ் கேட்’ சாலையில், சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள், 78, என்பவனின் பங்களா வீட்டில், நான்கு நாட்களாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி., சுந்தரம், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஜூன்.,3 ம் தேதி நடந்த சோதனையில், இரண்டு ரகசிய அறைகளில், தீனதயாள் பதுக்கி வைத்து இருந்த, சோழர் காலத்து, சிவன், பார்வதி உள்ளிட்ட, நான்கு ஐம்பொன் சிலைகள் மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட, கிருஷ்ணர், கோமாதா உள்ளிட்ட, மூன்று சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் கூறியதாவது: ஜெர்மனியில், 2008ல் கைதான சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளின் பங்களா வீடு, பளிங்கு கற்களால் இழைக்கப்பட்டதுபோல் உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால், ‘இந்த வீட்டிலா சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன’ என, கேட்கத்தோன்றும்.
ஆனால், அவன், இந்த பங்களாவை, சிலைகள் பதுக்குவதற்கென்றே பிரத்யேகமாக ரகசிய அறைகளுடன் கட்டி உள்ளான். தேக்கு மரத்தால் செய்யப்பட்ட, அழகிய வடிவமைப்பு கொண்ட, பேழையில் ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்து இருந்தான். யானை தந்தத்தால், மிக நேர்த்தியாக செய்யப்பட்ட கிருஷ்ணர், கோமாதா உள்ளிட்ட, ஆறு சிலைகளை படுக்கை அறைக்கு கீழே பதுக்கி வைத்து இருந்தான். ரகசிய அறைகளில், சோழர் காலத்து பழமையான ஓவியங்கள், செம்பு, வெண்கலத்தால் செய்யப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. வீட்டின் உட்புற சுவர் மற்றும், ‘கேலரி’யில், கலை நயமிக்க ஓவியம் அல்லது ஏதாவது அறிகுறிகள் கொண்ட இடத்தை, சந்தேகத்துடன் உடைத்து பார்த்தால், அந்த இடத்தில் ஒரு சிலை எட்டி பார்க்கிறது. இதனால், சிலைகளுக்கு சேதம் ஏற்படாதவாறு, நிதானமாக சோதனையிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி ஆய்வு செய்து, சோழர் காலத்து சிலைகள் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும், ஜூன், 6ம் தேதி, டில்லியில் உள்ள, இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த, மூன்று ஆராய்ச்சி குழுவினர் சிலைகளை ஆய்வு செய்ய உள்ளனர். சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவன், வியாபார ரீதியாக, லண்டன், அமெரிக்கா, அபுதாபி மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சென்று வந்தது தெரியவந்துள்ளது. அவனை பிடிக்க, தனிப்படை அமைக்கவில்லை. ஆனால், அவன் எங்களிடம் இருந்து இனி தப்பிக்கவே முடியாது. நியூயார்க்கில் பதுங்கி உள்ள, அவன் மகன் கிருதயாளுக்கும் குறி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வேட்டை தொடரும்: டி.எஸ்.பி., சுந்தரம் கூறுகையில், ‘‘தீனதயாள் வீட்டில், 55 கற்சிலைகள், 34 ஐம்பொன் சிலைகள், 42 ஓவியங்கள், ஆறு தந்தத்தால் ஆன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தீனதயாளுக்கு சொந்தமாக, ரகசிய இடம் ஒன்று உள்ளது. நீதிமன்றத்தில் முறையாக அனுமதிப்பெற்று, அந்த இடத்திலும் விரைவில் சோதனையை துவங்குவோம்,’’ என்றார்.