பதிவு செய்த நாள்
15
ஜூன்
2016
04:06
ஹயக்கிரீவர் வழிபாடு பாரத தேசத்தில் துவாபரயுகத்தின் கடைசியிலும், கலியுகத்தின் ஆரம்பத்திலிருந்தும் வந்திருக்கிறது என்று சொல்லலாம். தென்னிந்தியாவில், பன்னிரண்டு அல்லது பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து, அதிகமாகக் கொண்டாடப்படுகிறார் ஹயக்ரீவர். ஹயக்கிரீவர், வெள்ளையாடை உடுத்திருப்பவர். வெண்மை குதிரை முகம் கொண்டவர். வெள்ளைத்தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருப்பார். நான்கு கரங்களைக் கொண்டவர். வலது கீழ்க்கை வ்யாக்ரமுத்ரா என்றும், அக்ஷரமாலையும், இடது கையில் புத்தகமும், மேல் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி, வெகு கம்பீரமாக அமர்ந்திருப்பார். இவரைப் பெண் தெய்வமாகிய ஸரஸ்வதி தேவிக்கு ஒப்பிடலாம்.
ஞானத்திற்கும், புத்தி கூர்மைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் அதிபதியான தெய்வம், புத்தியில் படிந்திருக்கும் அஞ்ஞானத்தை நீக்கி, ஒளியைப்பாய்ச்சுபவர். மனிதர்கள் ஞாபகசக்தியையும், அறிவுக் கூர்மையையும், அவரை ஆராதித்து அடையலாம் என்பது பெரியோர்களின் கருத்து. வித்யாரம்பம் செய்யும் போது குழந்தைகளை ஹயக்கிரீவர் சன்னிதி முன் உட்காரவைத்து, நெல் அல்லது அரிசியைப்பரப்பி, அதில் கையைப் பிடித்து ஓம் என்று எழுத வைப்பார்கள். புதிய புத்தகங்கள், எழுது கோல்களையும், ஹயக்கிரீவர் சன்னதியில் வைத்து அர்ச்சகரை ஆசீர்வதித்துக் கொடுக்கச்செய்பவர். பரீட்சைகளுக்குப் போகும்போதும் அவர் சன்னிதியில் வைத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வர்.
அவ்வாறு ஒவ்வொரு முறையும் புதிய தொழில் ஆரம்பிக்கும்போதும், புதுவாகனங்கள் வாங்கும்போதும், இவ்வாறு அவர் சன்னிதியில் வைத்து ஹயக்கிரீவர் அருளைப் பெற்றுச் செல்வர். மஹாபாரதத்திலும் இவரைப்பற்றிக் குறிப்பு இருக்கிறது. பயங்கரமான ஹயக்கிரீவர் போர் செய்தது போல், கிருஷ்ணர் யுத்தகளத்திற்குத் தேரோட்டி வந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. தாரகாசுர யுத்தம் என்ற காப்பியத்தில் தாரகாசுரனை எதிர்த்த தேவர்கள் தோற்று ஓடினர். அப்போது விஷ்ணு பகவான் கோபம் கொப்பளிக்க ஆயிரம் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஹயக்கிரீவராக வந்து, தேவர்களை எதிர்த்தவர்களைத் துவம்சம் செய்தார் என்று கூறப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமங்களில், தேவநாகரியில் ஹயக்கிரீவர் ஸ்தோத்திரம் காணப்படுகிறது.
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம். ஹயக்கிரீவமுபாஸ்மஹே:
என்று கூறப்படுகிறது. நிர்மலமான ஸ்படிகத்தைப் போன்று ஒளி வீசுவார். எல்லா வித்தைகளுக்கும் ஆரம்பமாகவும், உந்து சக்தியாகவும் இருக்கிறார். ஞானத்தின் உருவமாக இருக்கிறார்.
வைணவ மதத்தின் ஆச்சாரியராக இருந்த ஸ்ரீமந்வேதாந்த தேசிகர், பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், இவர் ஹயக்கிரீவர் தியான ஸ்லோகங்கள் இயற்றியுள்ளார். சங்கு, சக்கரமும், ஸ்படிகமாலையும், புத்தகமும் ஏந்திய இவர் என் இதயத்தில் எப்போதும் குடியிருக்கட்டும் என்பதாக அமைகிறது அந்த ஸ்தோத்திரம்.
திருவனந்தபுரத்தில் ஒரு கோயிலில், இவர் யோக ஹயக்கிரீவராக எழுந்தருளியுள்ளார். மைசூரில் வைணவ சம்பிரதாய மடம் ஒன்று பிரம்ம தந்த்ர ஸ்வதந்த்ரஜீயர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் ஆஸ்தான தெய்வம். ஹயக்கிரீவர் ஆகும். அவர் வெள்ளைத் தாமரையில் பத்மாஸனத்தில், மஹாலக்ஷ்மியை, தன் மடியில் வைத்துக்கொண்டு, லக்ஷ்மி ஹயக்கிரீவராக விளங்குகிறார். இவரை வணங்குவதால் அஷ்ட ஐஸ்வர்களும் கிட்டும் என்பது ஐதிகம். ஹயக்கிரீவர், ஹயவதனப்பெருமாள் என்று தமிழில் அழைக்கப்படுகிறார். இவர் ஒளி பொருந்தியவர். இருட்டாக இருக்கும் பூமிக்கு முதல் வெளிச்சம் ஏற்படுத்த, இவர் தான் சூரியனை இழுத்து வருகிறார். இவரது மனைவி மாரிசி, ஒளியின் சக்தியாக இருக்கிறாள். இவளுடைய சக்தியையும், ஒளியையுமே கொண்டு ஹயக்கிரீவர், இருட்டைப்போக்கி, ஒளிவீசுமாறு செய்கிறார்.
இவர் புத்த அவதாரத்திற்குப்பின் வந்த விஷ்ணு அவதாரம் என்கிறார்கள். வேதமந்திரங்களால் ஆனதாம் இவர் உடம்பு. இவர் தலையில் நடுவில் சிவன், இதயம், பிரம்மா, சூரியனின் கிரணங்கள் (மாரி) இவரது பிடரி, சூரியனும், சந்திரனும் இவரது கண்கள், வசுக்களும், சாக்கியர்களும் இவரது கால்கள், அனைத்துத் தேவர்களும் இவரது உடல் உறுப்புகள். அக்னி அக்னி இவரது நாக்கு. இத்தனை சக்தியும் ஒளியும் வலிமையும் கொண்ட இவர் தன் கோபப் பார்வையில் கொடிய அசுரர்களையும், தீயவைகளையும் அழிக்கிறார். உலகில் அஞ்ஞானமாகிய இருளை நீக்கித் தூய ஞானத்தை அருளுகிறார். ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்காந்தம் 10 10ம் சர்கத்தில் 40ம் அத்தியாயத்தில் விஷ்ணு எடுத்து வந்த பத்து அவதாரங்களில், ஹயக்கிரீவரும் ஒன்று ஆகும் என்று உள்ளது. ராமர், கிருஷ்ணர் போலவே இவரும் ஸ்ரீமத் நாராயணனின் அவதாரம் எனப்படுகிறது.
வாதிராஜ தீர்த்தர், த்வைத வேதாந்த மடத்தை உடுப்பி கோஷத்திரத்தில் நிறுவியவர். அவர் ஹயக்கிரீவரின், ஆத்மார்த்த பக்தர். உடுப்பி கிருஷ்ணமடத்தைச் சேர்ந்த இவர், குதிரைக்கொள்ளு உணவில் சமைத்துத் தன் தலையில் வைத்துக்கொண்டு, ஹயக்கிரீவர் மீது ஸ்லோகம் சொல்வாராம். ஹயக்கிரீவர், வெள்ளைக்குதிரையாக வந்து அந்த கொள்ளு உணவை உண்டு விட்டுச் செல்வாராம்.
வாதிராஜதீர்த்தர் நஹயக்கிரீவத்பரம் மஸ்தி மங்கலம்
நஹயகிரீவத்பரம் அஸ்தி பாவனம்,
நஹயக்கிரீவத் பரம் அஸ்தி
தைவதம், நஹயக்கிரீவம் பிரானிபத்திய சீததி!
என்னும் ஸ்தோத்திரம்.
ஹயக்கிரீவரை விட உயர்ந்த தெய்வம் இல்லை. அவர் பாதங்களைச் சரண்டைந்தால், செய்த பாவங்கள் யாவும் விட்டொழியும், துன்பம் என்பதே இருக்காது என்பது அந்த ஸ்லோகத்தின் பொருள் ஆகும். வேதாந்ததேசிகன் ஏற்படுத்திய அஹோபில மடத்திலும் ஹயக்கிரீவர் எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீரங்கம் கோயிலில் இவர் சன்னிதி மிகவும் சக்தி வாய்ந்தது என்பார்கள். திருவஹீந்திபுரத்தில் இவர் குடிகொண்டுள்ளார். சென்னையை அடுத்துள்ள நங்கநல்லூர், செட்டி புண்ணியம் முதலிய ஊர்களில் கோயில் கொண்டுள்ள ஹயக்கிரீவர் மிகவும் வரப்பிரசாதி ஆவார்.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வரும் பவுர்ணமியும், நவராத்திரியின் ஒன்பதாவது நாளான மஹாருநவமி இவரை வழிபட உகந்த நாள்கள் என்று கூறுகின்றனர் பெரியோர்கள். ஹயக்கிரீவர் எப்படித் தோன்றினார் என்பதற்கு தேவி பாகவதத்தில் ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணு, அசுரகுலத்தவர்களோடு பதினோறாயிரம் வருடங்கள் போரிட்டு, அவர்களை அழித்து வேத தர்மத்தைக் காத்தார். அதனால் ஏற்பட்ட மன, உடல் களைப்பினால் சார்ங்கமென்னும் தன் வில்லின் மீதே தலையைச் சாய்த்து, தூங்கி விட்டார். அயர்ந்த நித்திரையில் இருந்ததால், அசுரர்களின் அராஜகம் அதிகமாயிற்று தேவர்களும், பூலோகவாசிகளும் மிகவும் துன்பமுற, எல்லோரும் பிரம்மாவை அணுகி, அதற்குத் தீர்வு கேட்க, அவர் சிவபெருமானைக் கேட்க, அவர் எல்லாவற்றிலும் இருந்து இயக்கும் மஹாசக்தியை நோக்கி விண்ணப்பித்தார்.
பிரம்மாவிடம் கேட்டபோது, தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை எழுப்புவது மகாபாபம். அவரை எப்படியாவது எழுப்ப வேண்டும் என்று சிவன் கேட்க, பிரம்மா தன் சிருஷ்டிகளில் சிறியவைகளான கரையான்களிடம் ஜனார்தனின் வில்லில் கட்டியிருக்கும் நாணைச் சிறிது சிறிதாக அறுத்தால் வில் சப்தத்துடன் நிமிறும். அவரும் வழித்துக் கொள்வார் என்று கூறகரையான்களும் அவ்வாறே செய்ய, வில்லும், உலகமே திரும்பும்படியாகச் சப்தத்துடன் நிமிர்ந்து, அதே சமயம் நிமிர்ந்த வேகத்தில் வில்லின் நாண் மஹாவிஷ்ணுவின் சிரத்தையும் கொய்தது. தலையின்றி உடல் மட்டுமே இருந்த மஹாவிஷ்ணுவைக் கண்டு அதிர்ந்த சிவன், பிரம்மா முதலான தேவகணங்கள் மஹாசக்தியிடம் சென்று முறையிட்டனர். காக்கும் தெய்வம் மறுபடியும் தம்தொழிலைச் செய்யுமாறு அணுக்கிரகிக்கவும் என்றனர்.
மஹாசக்தியானவள் அவர்களை நோக்கி கவலைப்படாதீர்கள் முன்பொருகாலத்தில் ஹயக்கிரீவன் என்ற அசுரன் என்னை நோக்கி, கடுந்தவம் புரிந்து, என்னிடம் சாகாவரம் வேண்டும் என்று கேட்க, அது முடியாது மாற்றுவரம் கேள் என்று கூற என்னைப் போன்ற ஒரு குதிரைமுகம் கொண்ட பிராணியால் மட்டுமே என்னைக் கொல்ல முடியும் என்ற வரம் வேண்டும் என்றான்; சக்தியும் அளித்தாள். அதன் பிறகு தைரியம் கொண்ட ஹயக்கிரீவன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகவும் துன்பம் விளைவித்தான். அதைத்தாங்கமாட்டாத, தேவர்கள் பராசக்தியிடம் முறையிட அவளும் திருமால்தான் அதற்குத்தகுதியானவர் என்று சங்கல்பித்து, அவர் தலையிழக்கும் படியாகச் செய்தாள். அவருக்கு ஒரு சிறந்த குதிரையின் முகத்தைப் பொருத்துமாறு கூற பிரம்மாவும், குதிரையின் தலையை வெட்டித் திருமாலுக்குப் பொருத்தினார். அவரும் காலாக்னியைப்போல் ஆக்குரோஷத்துடன், ஹயக்கிரீவனுடன் போரிட்டு அவனைக் கொன்றார். சுதர்ஸன சக்கரத்தைப் போன்று ஒளியுடன் திகழ்ந்தார். அறியாமையாகிய இருட்டை அழித்து, ஞானமாகிய ஒளியைப் பாய்ச்சுகிறார் இவர்.