பதிவு செய்த நாள்
15
ஜூன்
2016
04:06
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் வயப்படுகின்றனர். பிரம்மா இவர்கள் காதலை ஏற்று, திருமணம் செய்து வைத்ததாக ஒரு தகவல் கூறுகிறது. பத்து வயதுக்கு மேல் கிருஷ்ணன் துவாரகைக்குப் புறப்பட்டு விடுகிறான்! ராதையோ துவாரகைக்குச் செல்லவேயில்லை! ஆனால் ராதையின் காதலும், ராதையின் மேல் கிருஷ்ணன் கொண்ட காதலும்தான் இன்று வரை அமர காவியமாகப் பேசப்படுகிறது. அவனும் ராதா கிருஷ்ணன் என்றே அழைக்கப்படுகிறான்.
கோகுலம்.. கோவர்தன்.. நந்தவன் உட்பட்ட பகுதிகள் இன்றும் ராதாகிருஷ்ணனின் காதல் லீலைகளை நினைவாக்கும் பகுதிகள். பிருந்தாவனில் உள்ள பல கோயில்கள் ராதா, கிருஷ்ணன் சார்ந்தவை. இந்த ராதா கிருஷ்ணனின் காதல், மனித வாழ்வின் முதல் காதலின் அருமையை உலகிற்கு உணர்த்துகிறது. அதுதான் நிஜமாகப் போற்றப்பட்ட வேண்டிய காதல் எனவும் நினைவுபடுத்துகிறது!
இன்று கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையே, ராதா - கிருஷ்ணன் காதல் சார்ந்ததுதானே....! ராதாவோ சிவப்பு. கிருஷ்ணனோ கருப்பு. இதனால் கிருஷ்ணனுக்கு. ராதா தன்னை காதலிப்பாளா என்று தன்னிரக்கம்! தன் தாயிடம் தன் மனக்குறையைக் கேட்கிறான் கிருஷ்ணன்! அவன் தாயோ. ராதா உன் மீது மாறாத அன்பு பூண்டிருக்கிறாள். சந்தேகமாய் இருந்தால் சோதித்துப்பாரேன் எனத் தூண்டுகிறாள்! கிருஷ்ணனுக்கும் அதனை அறியத்தானே ஆசை. அதனால் கருப்பு வண்ணப் பொடியை எடுத்துச் சென்று ராதா அசந்த நேரத்தில், அவள் முகத்தில் பரப்புகிறான். கிருஷ்ணன் எதிர்பார்த்தது. உடனே ராதா கடும் கோபம் கொண்டு தன்னை விரட்டுவாள் என! ஆனால் ராதாவோ, தன் முகம் கருப்பானது கண்டு சந்தோஷப்படுகிறாள். ஆஹா.... இனி உனக்கு என் காதல் மீது சந்தேகம் எழாது, ஏனென்றால் நீயும் கருப்பு.... நானும் கருப்பு என்கிறாள். ராதாவின் காதலைப் புரிந்து கொண்ட கிருஷ்ணன், உடனே தயாராய் வைத்திருந்த மேலும் பல வண்ணப் பொடிகளையும் தெளிக்கிறான்.
கிருஷ்ணன் மீது காதல் வயப்பட்ட ராதாவோ.. கோபப்படுவதற்குப் பதில், சிரித்தாள். மேலும் சிரித்து கிருஷ்ணனை மேலும் ஆட்கொண்டாள். அங்கு காதல் வெற்றியடைந்தது! இந்தக் காரியங்கள்தான், ஹோலியின்போது, பல வண்ணப் பொடிகளைத் தெளிப்பதின் பின்னணி, காதலுக்கு வண்ணம் ஒரு பொருட்டல்ல! இன்றும் ராதாவின் தாக்கம் மேற்கு வங்காளம், திரிபுரா.... மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் என பல மாநிலங்களில் பரவி.... காதலுக்கு எல்லையில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது!