பதிவு செய்த நாள்
22
ஜூன்
2016
12:06
தாராபுரம்: தாராபுரம் அருகே, பழமையான கோவிலின் சுற்றுச்சுவரை இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் முற்றுகையிட்டனர். தாராபுரம், சிக்கனாபுரம் தண்ணீர் பந்தல் பகுதியில், தனியார் விவசாய நிலத்தில், 500 ஆண்டு பழமையான, கன்னிமார் கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. தமிழக அரசின் கிராம கோவில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தில், இதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது. பழமையான இக்கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு, தனியார் நிலத்தினர் தடை விதித்தனர். அத்துடன், நேற்று முன்தினம், இரவோடு இரவாக கோவிலின் சுற்றுச்சுவரையும் இடித்து தரைமட்டமாக்கினர். இதையறிந்த பக்தர்கள், நேற்று, கோவில் வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சு நடத்தினர். கோவில் பூஜைகள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம், ஆவணங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உறுதியளித்தனர். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.