பதிவு செய்த நாள்
25
ஜூன்
2016
12:06
வாரணாசி : ஆயிரம் ஆண்டு பழமையான, பகவத் கீதை புனித நூலின் கையெழுத்து பிரதியை, ஆன்லைனில் பார்க்கவும், படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. உலகளவில் முதல் பத்து இடங்களில் உள்ள கையெழுத்து பிரதி நூலகங்களில் வாரணாசியில் உள்ள, சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலையின் சரஸ்வதி நூலகமும் ஒன்று. சரஸ்வதி நூலக பொறுப்பாளர் சூர்யகாந்த் கூறியதாவது: நூலகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, அரிய கையெழுத்து பிரதிகள் உள்ளன. அவற்றை, டிவிடிகளாக்கும் பணியில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் ஈடுபட்டுள்ளது. தற்போது, 285 டிவிடிக்களில் உள்ள கையெழுத்து பிரதிகள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில், பகவத் கீதையின் ஆயிரம் ஆண்டு பழமையான கையெழுத்து பிரதியும் உள்ளது. அழியாத மையால் எழுதப்பட்ட இந்த பகவத் கீதை, இன்றும் தெளிவாக படிக்கும் வகையில் உள்ளது. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி, இந்த கையெழுத்து பிரதிகளை ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல், பொது மக்களும், படித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.