காஞ்சி மகாபெரியவர் காலத்தில் காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, பெரிய, சிறிய அகல்விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டுவரப்படும். அதில் திரியிட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும். மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார். வீடுகளிலும், கார்த்திகையன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். காரணம் இந்த எண்ணெய் முருகப்பெருமானுக்கு விருப்பமானது. மேலும் எதிரிகளின் தொல்லை, கடன் தீர்தல், ஆயுள் விருத்தி, சகோதர உறவு வலுப்படுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார். கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர்.