பதிவு செய்த நாள்
08
ஜூலை
2016
11:07
குகை: கோவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து, அதன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை தாக்கல் செய்ய, பரம்பரை அறங்காவலர்கள் இருவருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சேலம், குகை, லைன்மேட்டில், அம்பலவாணர் சுவாமி கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக, நான்குரோடு அருகே, நாராயணசாமி தெருவில் கல் மண்டபத்தை சுற்றி, ஆக்கிரமிப்பு செய்து, 2,160 சதுரடியில், கட்டப்பட்டிருந்த இரு டீக்கடைகள், ஒரு ஓட்டல், வக்கீல் அலுவலகம் ஆகியன இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அதை தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், நேற்று, பரம்பரை அறங்காவலர்கள் லட்சுமணன், சீதாலட்சுமி ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதற்கு, ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸில் கூறியிருப்பதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், வணிக ரீதியாக பயன்படுத்த தீர்மானத்தில் கையெழுத்திட்டது குறித்து விளக்கம் தர வேண்டும். 1954 டிச., 19ல், முன்னாள் அறங்காவலர் அப்பாவு என்பவரிடம், சுவாமி மற்றும் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் செய்து கொடுக்க வழங்கப்பட்ட, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளியை, இன்னமும் தேவஸ்தானத்துக்கு ஒப்படைக்கப்படவில்லை. கோவிலுக்கு சொந்தமான, நாமக்கல் மாவட்டம், மோகனூரில், 4.72 ஏக்கரில் உள்ள தென்னை தோப்பு, இதுவரை குத்தகைக்கு விடப்பட்டது குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். கோவில் தர்ம பணிக்காக, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வங்கியில் முதலீடு செய்திருக்கும் பணம், பாகப்பிரிவினை பத்திரம், குறிப்பாக, தொடர்ந்து, அறங்காவலர் பதவி வகிக்க, தற்போதைய உடல்நிலை குறித்து, அரசு டாக்டரின் சான்று உள்ளிட்டவைகளை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.