பதிவு செய்த நாள்
08
ஜூலை
2016 
11:07
 
 அரூர்: அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணையாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, மூன்று மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதத்தில் தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழா அன்று இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட, பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, வரும் ஆடிப்பெருக்கு விழாவிற்குள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேடகட்டமடுவு பஞ்., நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு பலியிடப்படும் ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவு, தலைமுடி அனைத்தும் தென்பெண்ணையாற்றில் கொட்டப்படுகிறது. மேலும் வேடகட்டமடுவு பஞ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கும் ஆற்றை ஒட்டியே உள்ளது. இதனால் ஆற்றுநீர் மாசடைந்து வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.