பதிவு செய்த நாள்
14
செப்
2011
02:09
1. திரு ஆலவாய் உடையார், 2. காரைக்கால் அம்மையார், 3. ஐயடிகள் காடவர்கோன், 4. சேரமான் பெருமாள் நாயனார், 5. நக்கீர தேவ நாயனார், 6. கல்லாட தேவ நாயனார், 7. கபில தேவ நாயனார், 8. பரண தேவ நாயனார், 9. இளம் பெருமாள் அடிகள், 10. அதிரா அடிகள், 11. திருவெண்காட்டு அடிகள், 12. நம்பியாண்டார் நம்பி
நூல் வரலாறும் நூல் ஆசிரியர்கள் வரலாறும்
1. திரு ஆலவாய் உடையார்
இவர் மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆவார். தமிழ்ச் சங்கத் தலைவராக வீற்றிருந்தருளிய இப்பெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்கு அனுப்பிய திருமுகப்பாசுரம் இதில் முதற்கண் உள்ளது. இதில் அனுப்புநர், பெறுநர், செய்தி முதலியவை நிரல்பட எழுதப்பட்டுள்ளன.
2. காரைக்கால் அம்மையார்
இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர். கணவன் தம் தெய்வத் தன்மை கண்டு பத்திமையோடு துறந்து ஒழுக, இறைவனிடம் பேய் வடிவை வேண்டிப் பெற்றவர். இறைவனும் இப்பெருமை சேர் வடிவுடன் தம்பால் என்றும் இருக்க என அருளப் பெற்றவர். இவர் காலம் கி.பி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம். இவர் எழுதிய நூல்கள் வருமாறு.
1. திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகங்கள் இரண்டு.
2. திருஇரட்டை மணி மாலை
3. அற்புதத் திருவந்தாதி
3. ஐயடிகள் காடவர்கோன்
காடவர் என்பது பல்லவ மரபினரைக் குறிக்கும் பொதுப்பெயர். இவர் காஞ்சி மாநகரைத் தலை நகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட பேரரசர். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இவர் பாடிய நூல் ÷க்ஷத்திரத் திருவெண்பா என்பதாகும்.
4. சேரமான் பெருமாள் நாயனார்
இவர் சேர நாட்டுப் பேரரசர், வேறு பெயர் கழறிற்றறிவார். திருச்சிலம்பு ஓசை கேட்டு வழிபடும் பேறு பெற்றவர். இறைவனின் திருமுகம் பெற்ற பேறுடையவர். சுந்தரரின் தோழர். அவருடன் கயிலைக்குச் சென்று இறைவனின் இன்னருள் பெற்றவர். இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர். இவர் அருளிய நூல்களாவன:
1. பொன் வண்ணத் தந்தாதி
2. திருவாரூர் மும்மணிக் கோவை
3. திருக் கயிலாய ஞான உலா
5. நக்கீர தேவ நாயனார்
சங்க காலத்தில் வாழ்ந்த நக்கீரருக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டவர் இவர். எனினும் பெயர் ஒற்றுமையால் இருவரும் ஒருவர் எனக் கருதப் பெற்றனர். சங்க கால நக்கீரர் எழுதியது திருமுருகாற்றுப்படை ஒன்றே. மற்றவை பிற்காலத்தவரான நக்கீர தேவநாயனாரால் எழுதப்பட்டவை.
1. கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
2. திரு ஈங்கோய் மலை எழுபது
3. திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
4. திருஎழு கூற்றிருக்கை
5. பெருந்தேவபாணி
6. கோபப் பிரசாதம்
7. கார் எட்டு
8. போற்றித் திருக்கலி வெண்பா
9. திருமுருகாற்றுப்படை
10. திருகண்ணப்பதேவர் திருமறம்
6. கல்லாட தேவ நாயனார்
கல்லாடர் என்னும் பெயருடைய புலவர்கள் மூன்று அல்லது நான்கு பெயர்கள் இருந்திருத்தல் கூடும். கல்லாடம் என்பது ஒரு சிவத்தலம். அதில் எழுந்தருளிய சிவபெருமான் கல்லாடர் எனப் பெறுவார். ஆகவே இப்புலவர்களும் அப்பெயர் பெற்றனர் எனலாம். இவர் எழுதிய நூல் திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்பதாகும்.
7. கபில தேவ நாயனார்
இவரும் கடைச் சங்க காலப் புலவராகிய கபிலரும் ஒருவர் அல்லர். இவர் காலத்தால் பிற்பட்டவர். இவர் எழுதிய நூல்களாவன:
1. மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை
2. சிவபெருமான் திரு இரட்டை மணி மாலை
3. சிவபெருமான் திருவந்தாதி
8. பரண தேவ நாயனார்
இவரும் கடைச் சங்க காலப் பரணரின் வேறானவர். காலம்: கடைச் சங்ககாலப் புலவர் பெருமக்களின் பெயர் பெற்ற இந்நால்வரும் கி.பி. 9,10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாவர். இவர் செய்த நூல்: சிவபெருமான் திருவந்தாதி
9. இளம் பெருமாள் அடிகள்
இவருடைய நாடு, ஊர், குலம் முதலியன இவையெனத் தெரியவில்லை. இவர் அருளிய நூல் சிவபெருமான் திருமும்மணிக் கோவை என்பதாகும்.
10. அதிரா அடிகள்
இவருடைய ஊர், குலம் வரலாறுகள் யாதொன்றும் தெரியவில்லை. அதிராவடிகள் என்னும் பெயர் எதற்கும் கலக்கமடையாத உள்ளமுடைய பெரியாரைக் குறிப்பதாகும். இவர் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனலாம். இவர் செய்த நூல்: மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை. (விநாயகரைப் பற்றிய நூல்)
11. திருவெண்காட்டு அடிகள்
இவர் காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றியவர். பட்டினத்துப் பிள்ளையார் எனவும் அழைக்கப்பெறுபவர். திருவெண்காட்டு அடிகள் எனவும் பட்டினத்துப் பிள்ளையாரெனவும் பெயர் வழங்கப் பெற்றவர். இருவேறு காலங்களில் இருவர் இருந்திருத்தல் வேண்டும். அடியிற் கண்ட நூல்களை இயற்றியவர் காலத்தால் முற்பட்டவர் எனலாம்.
இவர் அருளிய நூல்கள்
1. கோயில் நான்மணிமாலை (சிதம்பரம் பற்றியது)
2. திருக்கழுமல முண்மணிக் கோவை (சீர்காழி பற்றியது)
3. திருவிடை மருதூர் மும்மணிக் கோவை
4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி (காஞ்சிபுரம்)
5. திருவொற்றியூர் ஒருபா ஒரு பஃது
12. நம்பியாண்டார் நம்பி
இவர் திருநாரையூரில் தோன்றியவர். ஆதிசைவர். திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் பொல்லாப் பிள்ளையாரால் ஆட்கொள்ளப் பெற்றவர். அப்பெருமானால் திருமுறைகளைக் காணவும், கண்டவற்றை ஏழு திருமுறைகளாகத் தொகுக்கவும் பேறு பெற்றவர். 63 நாயன்மார்களுடைய வரலாற்றையும் திருத்தொண்டத் தொகையைக் கொண்டு வழி நூலாக விரித்தோதியவரும் இவரே. திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் பதினொரு திருமுறைகளையும் இவர் வகுத்தருளினார். சேக்கிழார் பாடிய திருமுறைகளையும் இவர் வகுத்தருளினார். சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் பிறகு பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.
இவர் செய்த நூல்களாவன:
1. திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
3. திருத்தொண்டர் திருவந்தாதி
4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை
7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
9. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
10. திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை
காலம் : இளம் பெருமான் அடிகள் முதலாகவுள்ள இந்நால்வரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் தொடக்கமுமாகக் கருதுகின்றனர்.