மேட்டுப்பாளையம்: காரமடையில் ஏகாம்பரேசுவரசுவாமிக்கும், காமாட்சி அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.காரமடை பாவடி மைதானத்தில் காமாட்சியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆனி உத்திரத் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, ஏகாம்பரேசுவரசுவாமிக்கும், காமாட்சி அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கற்பக விநாயகர் கோவிலில் இருந்து, செங்குந்த மகாஜன சமுதாய பெண்கள் சீர் வரிசை பொருள் தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து, மணமேடை முன்பு வைத்தனர். மணமேடையில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த ஏகாம்பரேசுவர சுவாமிக்கும், காமாட்சி அம்பிகைக்கும் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார் மாங்கல்யத்தை அணிவித்து, திருக்கல்யாணத்தை நடத்தினார். இதையடுத்து, மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்; பெண்களுக்கு தாலி சரடுகள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் சுப்பிரமணியம், காரமடை வட்டார தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தலைவர் குழந்தைவேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.