பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், அகோபில மடம், 46வது அழகிய சிங்கர் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே, இஞ்சிமேடு கிராமத்தில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 70 அடி உயரம் கொண்ட, ஐந்து நிலை ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டது. இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த, 7ம் தேதி, சாலை அமைக்கப்பட்டு பூஜை துவங்கியது. கடந்த, 9ம் தேதி காலை விசேஷ ஹோமமும், பிற்பகல் ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார், பரிவார மூர்த்திகளுக்கு, 17 கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டன. பின்னர் அகோபில மடம், 46வது அழகிய சிங்கர் தலைமையில் விசேஷ ஹோமம் செய்யப்பட்டு, தெய்வங்களுக்கு கண் திறப்பு நடந்தது. நேற்று முன்தினம் சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, மஹாலஷ்மி ஹோமம், தம்பதி பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டது. நேற்று காலை, 5 மணிக்கு, விஸ்வரூப தரிசனமும், 7 மணிக்கு சதுர்த்தி அர்ச்சனம், காலை, 9 மணிக்கு மகா பூர்ணாஹதி, யாத்ரா தானம், நடந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், அனுமன், கல்யாண நரசிம்மர், லட்சுமி, நரசிம்மர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.