பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
சேலம்: ராஜகணபதி கோவிலில், நேற்று கோடி அர்ச்சனை நிறைவுவிழா நடந்தது. சேலம், தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், ஜூன், 9ம் தேதியன்று, கோடி அர்ச்சனை விழா துவங்கியது. அன்று முதல், தினமும் ராஜகணபதிக்கு, மூன்று லட்சம் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. கடந்த, 6ம் தேதியுடன், கோடி அர்ச்சனை நிறைவுபெற்றது. இந்த நிலையில், அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், நேற்று காலை, 1,008 கலச அபிஷேகம் மற்றும் மகா புஷ்பயாகம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள், பூக்களை ஊர்வலமாக கொண்டு வந்து, விநாயகருக்கு சமர்ப்பித்தனர். சிறப்பு அர்ச்சனை மற்றும் அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடந்தது. மதியம், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. பின், சத்தாபரண ஊர்வலம் நடந்தது. அதில், சிவ பார்வதியிடம், மாம்பழம் பெற, சுற்றி வரும் காட்சி, கீதாசார ரதத்தை வலம் வரும் காட்சி, அன்னபட்சி வாகனத்தில் ராஜகணபதி அருள்பாலிக்கும் காட்சி என மூன்று வாகனங்களில், தத்ரூபமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், ராஜகணபதிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு பின் செய்யப்பட்டிருந்த, இந்த அலங்காரம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.