திருப்புத்துார்: திருப்புத்துார் தென்மாப்பட்டு மூங்கில் அமர்ந்தவள் ஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 9ல் யாகசாலை பூஜை துவங்கியது. மதுரை வேலாயுதபட்டர் (எ) சிவக்குமார் பட்டர் தலைமையில் பூஜைகள் துவங்கியது. நேற்று நான்காம் கால யாகபூஜை ,வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சிவாச்சார்யார்கள் யாகசாலையிலிருந்து கடத்துடன் விமான,கோபுரங்களுக்கு சென்றனர். காலை 9.20 மணிக்கு விமான கலசங்களுக்கு யாகசாலை புனிதநீரால் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்து, அலங்கார தீபாராதனை நடந்தது. திருப்பணிக்கான ஏற்பாடுகளை அஜூந்தா குரூப்ஸ் எம்.சரவணக்குமார்-ராகினி, எம்.ரமணன்-லில்லி மற்றும் அனைத்து ஊர் பங்காளிகள், திங்களூர் ஸ்ரீமூங்கில் அமர்ந்தவள் ஈஸ்வரி(சப்தமாதா) ஆலய அறக்கட்டளையினர் செய்தனர்.
மானாமதுரை: மிளகனுார் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மிளகனுார் வரசித்தி விநாயகர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்தன. கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளை தெய்வசிகாமணி பட்டர் தொடங்கி வைத்தார்.நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை தொடங்கின. காலை 9.55 மணிக்குகோயில் கோபுரத்தை கருடன் வட்டமிட கும்பத்தில் புனித நீர் ஊற்றி பூலன்குறிச்சி அம்பி பட்டர், பரத்வாஜ் பட்டர் நடத்தினர்.ஏற்பாடுகளை மிளகனுார் கிராமமக்கள் செய்திருந்தனர்.
திருப்புவனம்: திருப்புவனம் ஆனந்த அய்யப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. திருப்புவனத்தில் இருந்து வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதமிருந்து சென்று வருகின்றனர். வருடம் முழுவதும் அய்யப்பனை தரிசனம் செய்ய திருப்புவனம் புதுாரில் ஆனந்த அய்யப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில வருடங்களாக திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் அதிகாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9.50 மணிக்கு குருநாதர் போஸ் சுவாமி தலைமையில் கோவை பாலசிவாத்மஜன் சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். காலை கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆனந்த அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை திருப்புவனம்புதுார் ஆனந்த அய்யப்பன்சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.