பதிவு செய்த நாள்
14
ஜூலை
2016
11:07
தேனி: குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்து பேசியதாவது: ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை (29 நாட்கள் ) இப்பெருவிழா நடக்கவுள்ளது. பக்தர்கள் ஆற்றில் குளிக்கும் இடம் வரை பாதைகள் சீரமைத்தல், நிழற்குடை அமைத்தல், பக்தர்கள் குளிக்கும் இடத்தில் தற்காலிக உடை மாற்றும் அறை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற மேற்கொள்ளப்பட வேண்டும். பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோயில் வளாக பகுதிகளில் தகவல் தொலை தொடர்பு மையம் அமைத்து, ஒலி பெருக்கி வாயிலாக அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். பொது சுகாதாரத்தின் மூலம் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட வேண்டும். மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரூராட்சி மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து கோயிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன, என்றார். மகேஷ் எஸ்.பி., இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் பச்சையப்பன், கலெக்டர் நேர்முக உதவியாளர் பார்த்தீபன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., ராஜையா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் வடிவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், போடி டி.எஸ்.பி., பிரபாகரன், மாவட்ட போக்குவரத்து கழக மேலாளர் அறிவானந்தம், குச்சனுார் சனீஸ்வரர் கோயில் தக்கார் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் கிருஷ்ணவேனி உட்பட பலர் பங்கேற்றனர்.