கோவிந்தா கோஷம் முழங்க.. பரமக்குடியில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2016 12:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவின் 9 ம் நாளான ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் திருத்தேரில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் பெருமாள் அன்னம், சேஷம், சிம்மம், கருடன், அனுமன், யானை, குதிரை வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 17ம் தேதி இரவு பெருமாள் - ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. 18ம் தேதி முத்துப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணனாக தவழும் கோலத்தில் பெருமாள் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளினார். ரதவீதிகளில் திரண்ட ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். சரியாக மாலை 3 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு 501 தேங்காய்கள் உடைக்கப்பட்டது. இரவு பெருமாள் சயன கோலத்தில் வலம் வந்தார்.