பதிவு செய்த நாள்
17
செப்
2011
11:09
திருப்பூர் : திருப்பூர் பல்லடம் மெயின் ரோட்டில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. டி.கே.டி., மில் அருகே பாலாஜி நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் இரண்டாவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நவக்கிரக மூர்த்திகள் புதிதாக அமைக்கப்பட்டன. மேலும், மதில் சுவர் எழுப்பி, கோவிலுக்கு வர்ண வேலைகள் செய்யப்பட்டன. கடந்த 14ம் தேதி யாகசாலை அமைத்து, கணபதி பூஜை, கர்த்தா சங்கல்பம், வாஸ்து சாந்தி, ரஷாபந்தனம், கும்பஸ்தானம் அமைக்கப்பட்டு முதற்கால பூஜை நடந்தது. வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையுடன் திரவிய யாகம், சிவாச்சாரியார் வழிபாடு, ஆத்மாத்திரம் திரவிய யாகம் நடந்தது.மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, 10.00 மணிக்கு விக்ரஹங்கள் அஷ்டபந்தனம் நடந்தது. நேற்று காலை 5.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மகா பூர்ணாஹூதி, கலசங்கள் புறப்படுதல், யாத்ரா தான சங்கல்பம் நடந்தது.காலை 6.15 மணிக்கு விமான கோபுர கலச கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7.15 மணிக்கு கூனம்பட்டி ஆதீனம் திருமடம் நடராஜ சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. நடராஜ சுவாமிகள் அருளாசி வழங்கினார். கும்பாபிஷேக யாக பூஜைகள் கூனம்பட்டி திருமடம் கிரிவாச சிவம் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாலாஜி நகர், சபாபதி நகர், விக்னேஸ்வரா நகர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.