பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
12:07
திருத்தணி: முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா ஒட்டி, நேற்று இரண்டாம் நாள் தெப்பத்திருவிழா நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 26ம் தேதி முதல் இன்று (30ம் தேதி) வரை, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழா நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்தனர். தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு சரவணபொய்கையில் நடந்த முதல் நாள் தெப்பத்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, உற்சவர் பெருமானை வழிப்பட்டனர்.
நேற்று இரண்டாம் நாள் தெப்பத்திருவிழா ஒட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் மலைக்கோவிலுக்கு எடுத்து வந்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப் படிகள் வழியாக மலையடி வாரத்தில் உள்ள சரவணபொய்கை அடைந்தார். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவபெருமான் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. பின், இரவு, 7:30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியுடன் தெப்பம் உலா வந்தது. இரண்டாம் நாள் தெப்பம் விழாவில், உற்சவர் ஐந்து முறை குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரை படிகளில் குவிந்து இருந்தனர். சில பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர். இன்று மாலை மூன்றாம் நாள் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன் மற்றும் ஊழியர்கள்செய்திருந்தனர்.