பதிவு செய்த நாள்
02
ஆக
2016
01:08
சென்னை, மீனம்பாக்கத்தில், எட்டாவது ஆன்மிக கண்காட்சி, இன்று கோலாகலமாக துவங்குகிறது. அதில், 400க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன. அறநெறி, கலாசார பயிற்சிக்கான முனைப்பு நிறுவனமும், இந்து ஆன்மிக சேவை நிறுவனமும் இணைந்து, ஆண்டுதோறும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நடத்தி வருகின்றன. இந்தாண்டு, எட்டாவது கண்காட்சியை, இன்று முதல் ஆக., 8ம் தேதி வரை, சென்னை, மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில் நடத்துகின்றன. சுற்றுச்சூழலை பராமரித்தல்; பெற்றோர் ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல்; பெண்மையை போற்றுதல்; எல்லா ஜீவராசிகளையும் பேணுதல்; நாட்டுப் பற்றை உணர்த்துதல்; வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், ஆகிய ஆறு கருத்துக்களை முன்வைத்து, இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு சாராத, 400க்கும் மேற்பட்ட அமைப்புகள், கண்காட்சியில் பங்கேற்கின்றன. ஆதீனங்கள், மடங்கள், கோவில்கள், உழவார பணி செய்யும் அமைப்புகள், பசு காப்பு மடங்கள், சுற்றுச் சூழல் மையங்கள் என, பல்வேறு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. ஆன்மிக சொற்பொழிவுகள், யோகாசனத்தின் சிறப்புகள், விரத முறைகள், இறை வழிபாட்டின் மாண்புகள் போன்றவை, கண்காட்சியில் விளக்கப் படுகிறது. 1.20 லட்சம் மாணவர்களுக்கு, இந்திய பாரம்பரியத்தை பறை சாற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கண்காட்சியை பார்வையிட வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இன்று மாலை கண்காட்சியை யோகா நிபுணர் பாபா ராம்தேவ் துவக்கி வைத்து, அருளாசி வழங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக, சீக்கிய மதத்தை சேர்ந்த கியானி இக்பால்சிங், பவுத்த மதத்தை சேர்ந்த பேராசிரியர் கேஷே நவாங் சாம்டன், ஜெயின மதத்தை சேர்ந்த வீரேந்திரா ஹெக்டே ஆகியோர் பங்கேற்கின்றனர். - நமது சிறப்பு நிருபர் -