பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
கோவை: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று விசேஷ வைபவங்களும், ஒரே நாளில் நடைபெற்றதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று பேரூரில் கூடினர். ஆடி அமாவாசை நாளில், நொய்யலில் நீராடி, மூதாதையர்களுக்கு, திதி, தர்ப்பணம் செய்து, பேரூர் பட்டீசுவரரை வழிபாடு செய்ய, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், பேரூர் படித்துறையில் கூடினர். தங்களது, மூதாதையருக்கு திதி தர்ப்பணம் செய்து, இறைவழிபாடு செய்தனர். நொய்யலை இறைவனாக பாவித்தும், கூழாங்கற்களை, சப்த கன்னிமார்களாக எழுந்தருளுவித்தும், பூ, மஞ்சள், குங்குமம், வளையல் சமர்ப்பித்தும் தேங்காய், பழம் படைத்தும், வழிபாடு செய்தனர். ஆடி அமாவாசையை யொட்டி, தங்கக் காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த, பட்டீசுவரரையும், கனகசபையில் வீற்றிருந்த சிவகாமி அம்பாள், நடராஜரையும் பக்தர்கள் வழிபட்டனர்.
குருபெயர்ச்சியையொட்டி, பட்டீசுவரர் சன்னிதானத்தின் தெற்கே அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு, மஞ்சள் பட்டாடை அணிவித்து, கொண்டைக் கடலை மாலை, பச்சை முல்லை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கு: புதுமணத்தம்பதியர், நொய்யல் படித்துறையில் உள்ள நாகர் மற்றும் விநாயகர் சன்னதியில் குழந்தைப்பேறு வேண்டி, அரச மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டனர். தென்மேற்குப்பருவ மழை பொய்த்துப் போனதால், நொய்யலில் தண்ணீர் இல்லை. பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அறநிலையத்துறை, படித்துறையில், ஆழ்துளை கிணறு பதித்து, தண்ணீர் வினியோகித்ததால், தண்ணீரை வியாபாரம் செய்யும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, மொபைல் கழிப்பறை நிறுவியதால், பக்தர்கள் திண்டாட்டமின்றி நொய்யலில் வழிபாடு செய்தனர். ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி ஆகிய முப்பெரும்விழா ஒரே நாளில் நடந்ததால், பேரூர் கோவில் மற்றும் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். போக்கு வரத்து மாற்றுப்பதையில் திருப்பிவிடப்பட்டது. நொய்யலை ஒட்டி செல்லும் வேடபட்டி சாலையில், போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. பேரூரை கடந்து செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. சுண்டக்காமுத்துார் மார்க்கமாக, வாகனங்கள் இயக்கப்பட்டன.
குருபெயர்ச்சி விழா: மருத மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரஹ சன்னிதியில், குருபகவானுக்குசிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன; குருப்பெயர்ச்சி வேள்வியும் நடந்தது. ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று, காலை, 9:27 மணிக்கு, குருபெயர்ச்சி யாகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் நடத்தினர். கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், மஞ்சள் பட்டாடை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோவிலில், குருபகவான் கொண்டக்கடலை மாலை அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் குரு பெயர்ச்சியான நேரத்தில், குருபகவான் சன்னிதியில் வழிபாடு செய்தனர்.