பதிவு செய்த நாள்
20
ஆக
2016
11:08
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில், கிருஷ்ண தரிசனம் எனும் சிறப்பு விற்பனை கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்களின் தரம், விற்பனையில், உலகளவில் தனி இடம் பிடித்துள்ளது, தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம். தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு, கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. பண்டிகைக் காலங்களுக்கேற்ற படைப்புகளை, புதுமையாக அறிமுகம் செய்வதில், பூம்புகார் தனித்துவத்தோடு விளங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பொம்மை கண்காட்சியை பூம்புகார் நிறுவனம் நடத்துகிறது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் நிறுவனம் சார்பில், அதன் விற்பனையகத்தில், கிருஷ்ண தரிசனம் என்ற தலைப்பில் கண்காட்சி துவங்கிஉள்ளது.
இதில், பஞ்சலோகம், பித்தளை, களிமண், காகிதக்கூழ், பளிக்குத்துாள், மரம், கருங்கல், சுட்டமண் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் இல்லாமல், கிரெடிட் கார்டு மூலம் பொம்மைகளை பெறும் வசதியும் உள்ளது. வரும், 26ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாகக் கொண்டாட விரும்புவோர்க்கு, இந்த கண்காட்சி, நிச்சயம் மகிழ்வைத் தரும்.- நமது நிருபர் -