கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2016 12:08
கீழக்கரை, திருப்புல்லாணி அருகே கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் 33ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா சுதர்ஸன ஹோமத்துடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடங்கள் ஏந்தியவாறு பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கண்ணபிரானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. தொடர்ந்து கண்ணபிரான் அழைப்பு, வழுக்கு மரம் ஏறுதல், வடம் இழுக்கும் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கொம்பூதி ஊராட்சி துவக்கப்பள்ளியில் மதுரா யாதவர் சங்கம், கொம்பூதி யாதவர் சங்கம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. தமிழ்நாடு யாதவர் மகா சபை மாநில துணைத்தலைவர் ஏ.எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எம்.பி., அன்வர்ராஜா முகாமை துவக்கி வைத்தார். 60 பேர் ரத்ததானம் செய்தனர்.