பட்டுமலை மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2016 12:08
கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் கோட்டயம் செல்லும் ரோட்டில் பாம்பனாறு அருகில் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் குன்றின்மீது அமைந்துள்ளது பட்டுமலை மாதா தேவாலயம். இங்கு ஆண்டுதோறும் எட்டுநோன்பு அனுசரிப்பு, மாதா திருவுருவம் பிரதிஷ்டை ஆண்டுவிழா மற்றும் பிறவித் திருநாள் என எட்டுநாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், தேனி மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு இன்று (ஆக. 31) திருவனந்தபுரம் பாதிரியார் அலோசியஸ் வாணியப்புரைக்கல் கொடியேற்றம் செய்கிறார். தொடர்ந்து எட்டுநாட்கள் திருவிழா நடைபெறும். ஆக. 4 ல் பாம்பனார் தேவாலயத்திலிருந்து பட்டுமலை அன்னை ஆடம்பர தேர்பவனி நடைபெறும். தமிழக பாதயாத்திரை பக்தர்களை வரவேற்று அவர்களுக்காக கம்பம் பங்குத்தந்தை அலெக்ஸ் ஞானராஜ், அனுமந்தன்பட்டி அந்தோணிசாமி, ராயப்பன்பட்டி ஜோசப் அந்தோணி, உத்தமபாளையம் மரிய லுாயிஸ் ஆகியோர் தமிழில் மறையுரை நிகழ்த்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சிறப்பு திருப்பலி, மறையுரை, பாவசங்கீர்த்தனம் போன்றவைகள் நடைபெறும் என விழாத் தலைவர் தேவராஜ் தேரியம் மற்றும் பட்டுமலை மாதா தேவாலய சுப்பீரியர் வில்சன் கல்லுங்கள், ஹிப்போலிடஸ் தடத்தில் ஆகியோர் அறிவித்துள்ளனர்.