பதிவு செய்த நாள்
03
செப்
2016
03:09
என்ன எழுதுவதாக இருந்தாலும், உ என பிள்ளையார் சுழி போட்ட பிறகு எழுதுகிறோம். இதற்கு காரணம் தெரியுமா? ஓம் என்று சொன்ன பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்ற பிரணவ (பிரணவ என்றால் என்றும் புதியது என்று பொருள்) மந்திரத்தை, அ,உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துக்களை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உஎன்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. இது பஞ்ச இந்திரியங்கள் எனப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளைக் குறிக்கிறது. இவற்றை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும். ஆயுள் கூடக்கூட, ஒருவன் துவங்கிய செயல் தடையின்றி முழுமையாக நிறைவேறும். உ என்பது காத்தல் எழுத்து. இது இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நமது செயல்பாடுகள் அனைத்திற்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். ஒரு கடிதம் எழுத துவங்கும் போது, அதில் எழுதப்பட உள்ள விஷயம் நமக்கும், அது சென்று சேருபவருக்கும் பாதுகாப்பையும், நன்மையையும் தர வேண்டும். அது மட்டுமல்ல! ஓம் என்ற மந்திரத்தில் அ, ம் என்ற மந்திரங்களுக்கு நடுவே பாதுகாப்பாக உ இருக்கிறது. இதைப் போலவே நாமும் கடவுளிடம் பாதுகாப்பை வேண்டி உ என எழுதுகிறோம்.