பதிவு செய்த நாள்
03
செப்
2016
03:09
விநாயகர் முன் தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதால் உடல்ரீதியான பிரச்னை தீர்கிறது. அறிவு அபிவிருத்தி ஏற்படுகிறது என்று அறிவியல் ரீதியாக சொல்வார்கள். இதிலே இன்னொரு புதிய ஆன்மிக ரகசியமும் அடங்கியிருக்கிறது. நம் வீட்டுக்கு யாராவது ஒரு ஏழையோ, நடுத்தர வருமானம் உள்ளவரோ தன் குழந்தையுடன் வருகிறார். குழந்தை பொருட்களை இழுத்து விளையாடும் போது, அப்படி செய்யாதே என்று அதட்டி கட்டுப்படுத்தி விடுவோம். வந்தவர்களும் பிள்ளையை கட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள். அதுவே பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளையாக இருக்கட்டும். குழந்தையை அதட்ட முடியாது. அதட்டினால் குழந்தை கோபிக்கிறதோ, என்னவோ...பெரிய மனிதருக்கு கோபம் வந்து விடும். “இது என்ன உலகத்தில் இல்லாத பொருளா...இது உடைந்து போனால் நான் வேறு வாங்கி தந்து விட மாட்டேனா...” என்று பொரிந்து தள்ளி விடுவார். இதற்குப் பதிலாக, அந்தக் குழந்தையை பாராட்டி பேசி விட்டால் போதும்.
பிள்ளை சந்தோஷப்படுகிறதோ இல்லையோ...பெரிய மனிதர் சந்தோஷப்பட்டு, நாம் கேட்டதைக் கூட செய்து கொடுத்து விடுவார். இன்னும் ஒருபடி மேலாக, அந்தக் குழந்தைக்கு ஏதாவது கோணங்கித்தனமாக விளையாட்டு காட்டி சிரிக்க வைத்து விட்டால் போதும். பெரிய மனிதர் குஷியாகி, ஏதோ பெரிதாக செய்யவும் நினைப்பார். ஊருக்கு பெரிய மனிதர் நாட்டாமை, ஜில்லாவுக்கு பெரிய மனிதர் கலெக்டர், மாநிலத்துக்கு பெரிய மனிதர் முதல்வர்..உலகத்துக்கே பெரிய மனிதர் பரமேஸ்வரனும், அவர் மனைவி பரமேஸ்வரியும் தான். இவர்கள் மனம் மகிழ வேண்டுமானால், இவரது பிள்ளையை சந்தோஷப்படுத்த வேண்டும். எனவே அந்தக் குழந்தைக்கு பிடித்த மோதகம், கரும்பு, அவல், பொரி என கொடுப்பதுடன், அவர் முன்னால் நின்று காதுகளை மாற்றிப் பிடித்து, தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டினால் பிள்ளை மகிழும். அதைப் பார்த்து பெற்றவர்கள் மகிழ்வார்கள். நாம் கேட்ட வரம் கிடைக்கும். இவ்வளவு விஷயம் இருக்கிறது ஒரு தோப்புக்கரணத்தில்...என்ன! தோப்புக்கரணம் போட தயாராயீட்டீங்களா!