மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2016 11:09
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் நடை நேற்று அதிகாலை 4.00 மணியளவில் திறக்கப்பட்டது. மணக்குள விநாயகர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு அபிஷேகம், தீப நெய்வேத்தியங்களுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் தங்க கவசத்துடன் அருள் பாலித்தார். மணக்குள விநாயகர் கோவில் வீதி, நேரு வீதி, செஞ்சி சாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் தவிர்க்கப்பட்டன. காலை 7.00 மணியளவில் முதல்வர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன், அறங்காவலர் குழுவினர் வரவேற்றனர். தொடர்ந்து 1.30 மணி முதல் 3 மணி வரை உச்சிகால பூஜையும், இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. பக்தர்களுக்கு இடைவிடாமல் லட்டு பிரசாதம் வழங்கப்ப்டடது.
லட்சுமி பிசி: மணக்குள விநாயகர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில் யானை லட்சுமி வழக்கமான நாட்களில் மாலை 4.40 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்கும். விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 12 மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்கியது.