பதிவு செய்த நாள்
12
செப்
2016
06:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையின் புனிதம் காக்க அரசு நிர்வாகங்கள், பொதுமக்கள் முன் வரவேண்டும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கிழக்கு பகுதியில் மலையின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. பொய்கைக்குள் மூன்று தீர்த்த கிணறுகள் இருந்துள்ளன. மழை பெய்தால் மட்டுமே பொய்கை நிரம்பும். பொய்கையிலிருந்து தண்ணீர் வெளியேற வழியில்லை.
அபிஷேகம்: சரவணப் பொய்கையில் இருந்து தினம் அதிகாலை வெள்ளி குடத்தில் தீர்த்தம்(திருமஞ்சனம்) எடுத்து யானையின்மீது கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு கொடி கம்பத்தின் அடிப்பகுதியிலும், பலி பீடத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர கார்த்திகை திருவிழா, பங்குனி திருக்கல்யாண பட்டாபிஷேக நிகழ்ச்சிகளின் போது, முருகப் பெருமான் தங்க கிரீடத்திற்கு சரவணப் பொய்கை தண்ணீர்மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோயில் கொடியேற்ற திருவிழாக்களின் கடைசி நாளில் அஸ்தர தேவர் சரவணப் பொய்கையில் நீராடி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டுமின்றி சுற்றுப்பகுதியிலுள்ள கோயில்களின் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைக்காக பொய்கையிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
அசுத்தப்படுத்தப்படும் பொய்கை: இவ்வாறு புனிதம் வாய்ந்த சரவணப் பொய்கையில் அப்பகுதியினர் குளித்தும், துணி துவைத்தும் வருகின்றனர். பழைய பாய், துணிகள், தலையணைகளை தண்ணீருக்குள் போட்டுச் செல்கின்றனர். சோப்பு, சீகைக்காய் பவுடர், ஷாம்புகளை பயன்படுத்திவிட்டு அவற்றிலிருக்கும் பேப்பர், பாலித்தீன் பாக்கெட்டுகளை தண்ணீருக்குள் போட்டுச் செல்கின்றனர். இறந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்து தண்ணீருக்குள் கரைக்கின்றனர். பொய்கை கரையின் ஒரு பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் பொய்கை தண்ணீர் சுகாதார கேடு அடைந்து, துர்நாற்றம் வீசுவதுடன், குளிப்பவர்களுக்கு தோல் நோய்களும் ஏற்படுகிறது. இருந்தும் வசதி இல்லாதவர்கள் பொய்கையில்தான் குளித்து, துவைத்தும் வருகின்றனர்.
மீன் குத்தகை: சில ஆண்டுகளாக சரவணப் பொய்கையில் மீன் குத்தகையும் விடப்படுகிறது. குத்தகை தாரர்கள் மீன்களை வளர்த்து பிடித்துவிடுகின்றனர். கழிவுகளை உண்ண மீன்கள் இல்லாததால் கழிவுகள் தண்ணீருக்குள் தங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. சமீபத்தில் ஆயிரக்கணக்காக மீன்கள் செத்தன. தண்ணீர் நிறம் மாறியது. அங்கு குளிக்க, துணி துவைக்க வேண்டாம் என கோயில் சார்பில் போர்டுகள் வைத்திருந்தாலும் மக்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
புனிதம் காக்க வேண்டும்: புனிதம் வாய்ந்த சரவணப் பொய்கையில் மீன் குத்தகையை தவிர்க்க வேண்டும். குளிக்க, துணி துவைப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். பொய்கை கரைகளில் பூங்காக்கள் அமைப்பதுடன், பூ செடிகள் நட்டு பராமரிக்க வேண்டும். சரவணப் பொய்கை தண்ணீரை பக்தர்கள் புனித தீர்த்தமாக பயன்படுத்த நடவடிக்கை வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், சுற்றுலாத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, போலீஸ், பொதுமக்கள் அடங்கிய விழிப்புணர்வு குழு அமைத்து புனிதம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.