பதிவு செய்த நாள்
13
செப்
2016
12:09
கொளத்தூர்: கோஷ்டி மோதலை தொடர்ந்து, கோட்டையூர் மாரியம்மன் கோவில், நேற்று, மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கோவிலை, அறநிலையத்துறை கையகப்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், கொளத்தூர் ஒன்றியம், காவேரிபுரம் பஞ்சாயத்து, கோட்டையூர், மாரியம்மன் கோவில் பண்டிகை நடத்துவது தொடர்பாக, இரு தரப்பு இடையே, மோதல் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஆக., 2ம் தேதி, மேட்டூர் தாசில்தார் கிருஷ்ணன், கோவிலை பூட்டி சீல் வைத்தார். பின், இருதரப்பும் கோவில் பண்டிகை நடத்துவதாக உறுதியளித்தால், வருவாய் துறையினர், கோவிலை திறந்துவிட்டனர். கடந்த மாத இறுதியில், கோவில் பண்டிகை முடிந்த நிலையில், கடந்த, 6ம் தேதி காலை, தெலுங்கனூரை சேர்ந்த, பூசாரி வெங்கடேசன் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார்.
இருதரப்பு மோதல்: அதற்கு, கோட்டையூரை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கோவிலை பூட்டிவிட்டு, வெங்கடேசன் சென்றார். அன்று மாலை, கோட்டையூரை சேர்ந்த சிலர், காரில் கொளத்தூர் வந்தனர். அப்போது, காவேரிபுரத்தை சேர்ந்த, ஒரு கும்பல், காரில் சென்றவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில், கோட்டையூரை சேர்ந்த, ஆறு பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக, காவேரிபுரம், தெலுங்கனூரை சேர்ந்த, 14 பேர் மீது, வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார், மூவரை கைது செய்தனர். இருதரப்பு மோதலால், கோட்டையூர், காவேரிபுரம் பகுதியில் பதற்றம் நீடித்ததால், ஒரு வாரமாக, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் மோதல் நீடிப்பதால், மேட்டூர் தாசில்தார் கிருஷ்ணன், நேற்று மாலை, மீண்டும் மாரியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்தார்.
பேச்சுவார்த்தை: மேட்டூர் சப் - கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: மாரியம்மன் கோவிலில் பூஜை நடத்துவதுதொடர்பாக, இருதரப்பு இடையே, மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இரு தரப்பினருக்கும் இடையே, உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், கோவிலை அறநிலைத்துறை கையகப்படுத்த, பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.