பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில், கடவுள் சிலைகள் மற்றும் கோவில் சொத்துக்களை பாதுகாக்க, பூசாரிகளுக்கு துப்பாக்கி, ’லைசென்ஸ்’ வழங்கப்பட்டு உள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கோவில்களில் உள்ள பழமையான சாமி சிலைகள் மற்றும் விலையுயர்ந்த நகைகளை கொள்ளையடிப்போர், கோவில் பூசாரிகளையும், காவலர்களையும் கொலை செய்கின்றனர். குலு மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன; அவற்றில் பல கோவில்களில், கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், 150க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் மடங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, சாமி சிலைகள், ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க, கோவில்கள் மற்றும் மடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், கோவில் பூசாரி மற்றும் காவலர்கள், துப்பாக்கி லைசென்ஸ் பெற்று, துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளும்படியும் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.