பதிவு செய்த நாள்
17
செப்
2016
02:09
தெய்வங்களில் முதலில் வணங்கவேண்டியவர் யானை முகத்தான், முழுமுதற்கடவுள் விநாயகப்பெருமான் அவரை வணங்கினால் எண்ணியது நிறைவேறும், தீராத வினைகள் தீர்ந்து வாழ்வில் எல்லா நலமும் பெறலாம். பொதுவாக தெய்வங்களில் விநாயகர் மட்டும் தான் கோயில்கள் தவிர மூச்சந்தி, குளத்துகரை, ஆற்றங்கரை, ஆலமரம்,வேப்ப மரத்தடிநிழல் உள்ளிட்ட பலபகுதிகளில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
அந்த வகையில் பழநியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் பழநி-உடுமலைரோடு சண்முகநதிக்கரையில் சுந்தர விநாயகராகவும், அவரது தம்பி முருகப்பெருமான் போல ஆறுமுகங்களுடன் ஆறுமுக விநாயகராக அருள்புரிகிறார். பழநிக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் வரும் பக்தர்கள் சண்முகநதிக்கரையில் நீராடி விநாயகர்களை வணங்கிவிட்டு அலகு குத்தியும், காவடி எடுத்தும் மலைக்கோயில் ஞான தண்டாயு தபாணிசுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதைப்போல சிவகங்கையை சேர்ந்த நகரத்தார் செட்டியார் சமுதாயத்தினர் புதிதாக தோகையடி விநாயகர் கோயில் கட்டியுள்ளனர். அங்கும் ஆறுமுக விநாயகர், புலிப்பாணி சுவாமிகள், நகரத்தார் குருமார்கள், நாக கன்னி, சர்ப்பங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இதுகுறித்து பூசாரி முருகேசன் கூறுகையில்,“ பாலாறு, பொருந்தல், வரட்டாறு, கண்டாறு, கல்லாறு, மூல்லாறு ஆகிய ஆறு சிறுநதிகள் ஒன்றாக சந்திப்பதால் அதற்கு சண்முக (ஆறு முகங்கள் கொண்ட முருகனின் பெயர்) நதி என பெயர் வந்தது. சுந்தர விநாயகர் கோயில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஆறுநதிகள் இணைவதால் ஆறுமுகங்கள் கொண்ட விநாயகர் இங்கு அருள்பாலிக்கிறார். அவரை வணங்கி அதன்பின் பக்தர்கள் காவடி எடுத்து செல்கின்றனர். முருகர், ஆஞ்சநேயர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, பராசக்தி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. கோயில் சாதரணநாட்களில் காலை 6:00 மணி முதல் இரவு 7:00மணிவரை விழாக்காலங்களில் இரவு 9மணி வரை நடை திறந்திருக்கும்,” என்றார். -மேலும் விபரங்களுக்கு: 90472 69157.