பதிவு செய்த நாள்
05
அக்
2016
03:10
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. ஆடிவந்தால் மழை பெய்ய ஆரம்பிக்கும் நிலத்தை உழுது விதை விதைத்திட தானியங்கள் பெருகும். இது பவுதீக நிலையில்! வைதீக, ஆன்மிக தத்துவத்தில் எதைக் குறிக்கிறது? ஆடி வெள்ளி, ஆடி - அமாவாசை, ஆடிப் பவுர்ணமி என்று அன்னை வழிபாடுகள் அதிகம் நடக்கும். மேலும் ஆடிப் பவுர்ணமியில் மடாதிபதிகள் வியாஸபூஜை ஆரம்பித்து, ஒரே இடத்தில் இருந்துகொண்டு, வேத சூத்ர பாஷ்ய ஆய்வுகள், ஸதஸ் போன்றவற்றை நிகழ்த்துவார்கள். (பிராணாயாமம் செய்யமாட்டார்கள்.) தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பம். ஆடிக் கிருத்திகை முருகன் வழிபாட்டுக்கு உகந்தது. ஆடிப்பூரத்தில் ஆண்டாள் அவதார உற்சவங்கள் நடக்கும்.
ஓணம் பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி, ராதாஜெயந்தி, விநாயக சதுர்த்தி, சாரதா நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் அனுமன் ஜெயந்தி, பொங்கல் என்று வழிபாடுகள், உத்ஸவங்கள் துவங்கும் ஆறு மாத காலம் ஆடியில்தான் ஆரம்பம். ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவு உன்னதமே. ஆக, ஆடி மாதம் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் ஒரு தனிதேவி வழிபாடும் உண்டு. நாம் சாதாரணமாக வீட்டில் கொலு வைப்பதிலிருந்து, சைவ -வைணவ வேறுபாடின்றி எல்லா கோயில்களிலும் நடக்கும் வைபவம் புரட்டாசி மாத நவராத்திரி விழா ஒன்றே. இதனை சாரதா நவராத்திரி என்பர். துர்க்காதேவி மஹிஷாசுரனை அழித்த நிகழ்வினையொட்டி கொண்டாடப்படுவது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் விரும்பித் துதிக்கும் தினங்கள் இவை.
இதனைத் தவிர மேலும் மூன்று நவராத்திரிகள் உண்டு. ராமநவமியையொட்டி கொண்டாடும் விழாவை லலிதா நவராத்திரி என்பர். மாசி மாத நவராத்திரியை சியாமளா நவராத்திரி என்பர். அதுபோன்று ஆடிமாத நவராத்திரியை வாராஹி நவராத்திரி என்பர். இந்த மூன்று நவராத்திரிகளை தேவி உபாசகர்களே கொண்டாடுவர்.
ஆதிபராசக்தியான ராஜராஜேஸ்வரிக்கு மந்திரி அல்லது மந்த்ரிணி சியாமளா தேவி, மாதங்கி அல்லது ராஜ மாதங்கி என்றும் பெயர். (மதுரை மீனாட்சியை சியாமளா என்பர்). ராஜராஜேஸ்வரிக்கு சேனாதிபதி வாராஹிதேவி மந்திரி, சேனாதிபதியின் ஆலோசனையில்தானே ராஜேஸ்வரி ராஜாங்கம் செய்யமுடியும். ஆகவேதான் வாராஹி தேவி முக்கியத்துவம் பெறுகிறாள்.
பல சிவன் கோயில்களில் சப்த மாதர்கள் என்று ஏழு தேவிகள் இருப்பர். அவற்றுள் வாராஹியைக் காணலாம். வராகம் என்றால் பன்றி. தேவி பன்றி முகத்துடன் இருப்பாள். வராக அவதார விஷ்ணுவின் சக்தியே வாராஹி மற்ற தேவிகள்?
பிராம்மி - பிரம்மாவின் சக்தி.
மகேஸ்வரி - ஈஸ்வரனின் சக்தி.
கவுமாரி - குமரனின் சக்தி.
வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்தி.
இந்திராணி - இந்திரனின் சக்தி.
சாமுண்டி - துர்க்கா, லட்சுமி இணைந்த சக்தி.
வாராஹியை தீவிர சக்தி, ஸ்ரீவித்யா உபாசகர்களே வழிபடுவர். வாராஹி தேவிக்கு தனி சகஸ்ரநாமமும், சக்கரமும் உண்டு.
தேவி உபாசனைக்கு பஞ்சதசாக்ஷரி (15 அட்சரங்கள்), க்ஷோடசி (16 அட்சரங்கள்) உன்னதமானவை இவை எளிதில் கிடைக்காது. புத்தகத்தில் வாசித்து உபாசனை செய்யக் கூடாது. குருமுகமாக உபதேசம் பெற்றபிறகே உபாசனை செய்யலாம்.
குருமார்களிடம் கணபதி, பாலா, சியாமளா, வாராஹி மந்திர தீட்சை பெற்றபிறகே இந்த உபாசனை கிடைக்கும். ஆகவேதான் அவர்களை தீக்ஷிதர் என்று கூறுகிறோம்.
தேவி புராணம் தேவி பாகவதம் வாமன புராணம் லலிதா உபாக்யானம் போன்றவை வாராஹி தேவியைப் பற்றி விவரிக்கின்றன.
தாருகாசுரன் யுத்தத்தில் காளிக்கும் சும்பாசுரன் யுத்தத்தில் சண்டிகைக்கும், பண்டாசுரன் யுத்தத்தில் லலிதைக்கும் உறுதுணையாக இருந்தவள் வாராஹிதேவி.
சியாமளா தேவியின் ரதம் கேயசக்கர ரதம்.
வாராஹி தேவியின் ரதம் - கிரிச்சக்கர ரதம்.
லலிதா சஹஸ்ரநாம 70- ஆவது நாமாவளி இதனை கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா என்று கூறுகிறது. கிரி என்றால் வராஹம். வாராஹியின் பெயர் தண்டநாதா.
வாராஹி வீர்ய நந்தனா - வாராஹி உபாசகனுடன் வாதாடாதே, என்பர். ஏன்? வாராஹி சேனாதிபதி என்பதால் கோபம், உக்ரம், அகங்காரம் கொண்டவள். உபாசகனும் அந்த குணம் பெறுகிறான். ஆனால் பக்தர்களை சாந்தமுடன், மகிழ்ச்சியுடன் ரட்சிப்பவள் வாராஹி.
வாராஹிக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும், லலிதா உபாக்யானம் 12 நாமங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது.
பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மஹாஸேனா, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகியவையே அவை. அவற்றுள் முதல் நாமம் மற்றும் கடைசி நாமம் ஆகியவற்றின் தத்துவங்கள்.
பஞ்சமி: சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம் எனப்படும் ஐந்து கிருத்யங்களில் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனப்படும் ஐந்தொழில்களில்) ஐந்தாவதான அனுக்ரஹ ரூபம், இதயம் உடையவள் இவள்.
லலிதா ஸஹஸ்ர நாமம் (949) பஞ்சம்யை என்று கூறும்.
க்ஷிப்ர ப்ரஸாதின்யை நம: அந்தர்முகஸமாராத்யாயை நம: என்றும் கூறுகிறது. அதாவது, இதயத் தாமரையில் உள்ளன்புடன் துதித்தால் உடனே அருள்பவள் என்று பொருள்.
ஆக்ஞா சக்ரேஸ்வரி: நெற்றியில் இரு புருவ மத்தியில் நாம் சந்தனம் குங்குமம் இடும் இடமே ஆக்ஞா சக்கரம் உடலைத் தொட்டு தீட்சை தருபவர்கள் (ஸ்பரிச தீட்சை) இவ்விடத்தைத் தொட்டே அருளுவார்கள்.
அங்கிருக்கும் வாராஹி தேவியின் ஞாபகமாகவே நாம் சந்தனம், குங்குமமிட்டு தேவியை வணங்குவதாக, அலங்கரிப்பதாக தத்துவம்.
தண்டநாதா, மஹாஸேனா ஆகிய பெயர்கள் சேனாதிபத்தியம், வீரியம், கம்பீரத்தைக் குறிக்கும்.
ஸங்கேதா, ஸமயேஸ்வரி, போத்ரிணி, வார்த்தாளி ஆகிய பெயர்கள் சமயோசிதமாகக் காரிய மாற்றத் தூண்டும் சக்தியைக் குறிக்கும் சிவா என்பது மங்களம் வெற்றி அடைவதைக் குறிக்கும்.
வாராஹிதேவியின் அருள்பெற இந்த 12 நாமங்களே போதும்.
இந்த தேவியை ஸ்வப்ன வாராஹி, தூம்ரவாராஹி ப்ருஹத் வாராஹி அஸ்த்ர வாராஹி என நான்கு ரூபங்களில் வர்ணிப்பர்.
வாராஹி விஷ்ணு சக்தியானதால் சங்கு, சக்கரம் உண்டு. அபய வரத கரங்கள் உண்டு பொதுவாக நான்கு கரங்கள். ஆறு கரங்கள் இருந்தால் கூடுதலாக கேடயம், வாள் இருக்கும். எட்டு கரங்கள் என்றால் வில், அம்பும் இருக்கும். உபாசகனின் தீய எண்ணங்களை அழிப்பவள் வாராஹி. காஞ்சி காமாட்சி கோயிலில், தேவியின் இடப்புறம் கோஷ்ட தேவியாக வாராஹியைக் காணலாம்.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் வாராஹிக்கு தனிச்சன்னிதி உண்டு. ராஜராஜனுடைய இஷ்டதெய்வம் வாராஹி. சோழ மன்னர்கள் போருக்குப் புறப்படுமுன் வெற்றியடைய வணங்கிய தேவி இவள்.
காசியில் திரிபுர பைரவி படித்துறையில் தரை மட்டத்திற்குக் கீழே பாதாள வாராஹி விளங்குகிறாள். பகலில் இவளை தரிசிக்கமுடியாது.
சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோயிலில் வாராஹிக்கு சன்னிதி உள்ளது.
திருச்சி - திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை வாராஹி என்பர். வாராஹி முகம் அல்ல, வாராஹி யந்திரம் பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும். அந்த தேவியின் உக்கிரம் தணிக்கவே ஆதிசங்கரர் தேவியின் காதில் ஸ்ரீசக்ரதாடங்கமும், எதிரே கணபதியையும் பிரதிஷ்டை செய்தார். (இவற்றை குருமுகமாக உபதேசம் பெற்றே ஜெபம் செய்ய வேண்டும்.)
ஷடாட்சரம் (6): ஓம் வாராஹ்யை நம:
த்வாதசாட்சரம் (12): ஓம் வ்ரூம்வாம் வாராஹி
கன்யகாயை நம:
காயத்ரி: ஸ்யாமளாயை வித்மஹே
ஹலஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.
இதனைத் தவிர 114 பீஜாட்சரங்கள் கொண்ட மந்திரம் ரஸ்மி மாலாவில் உள்ளது.
அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம் வரும் இரு துதிகள்!
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை நச்சு
வாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி சுக
நாயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.