பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட கலைவிழா மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. இக்கோயில் கலைவிழா 7 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் விழா நடைபெறும். இதில் இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். இறுதிநாளில் அம்மன் தேரில் எழுந்தருள்வார். அன்று நடைபெறும் தேரோட்டத்தை இப்பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் வழிபடுவார்கள். நுாற்றாண்டுக்கு மேல் பாரம்பரிய சிறப்பு கொண்ட இவ்விழா மும்மதத்தினர் பங்கேற்புடன் கோலாகலமாக துவங்கியது.
கிறிஸ்தவ பாதிரியார்: மதுரை கிறிஸ்தவ பணிக்குழு செயலாளர் பாதிரியார் அருள், மதுரை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் பஷீர்அகமது முன்னிலை வகித்தனர். தாசில்தார் கண்ணன் தலைமை வகித்தார். பக்தசபா செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். முன்னாள் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, பக்தசபா மூத்த உறுப்பினர் அரிஹரகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஏ.டி.ஜி.பி., பிள்ளையார்சாமி, இன்ஸ்பெக்டர் நாகராஜன், சமூக அறிவியல் கல்லுாரி முதல்வர் கூடலிங்கம், நல்லாசிரியர் ஹரிஹரன் உட்பட பலர் பேசினர்.
சமூக ஒற்றுமை: பாதிரியார் அருள் பேசுகையில்,“மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமைக்கு இந்த ஊர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது,” என்றார். பஷீர் அகமது பேசுகையில் “குரானில் என்ன கருத்து கூறப்பட்டுள்ளதோ அதையேதான் ராமாயணம், மகாபாரதமும் கூறுகிறது. இறைவன் எந்த வடிவில் இருந்தாலும் இறை ஒன்றுதான். வழிபாடும், வழிபாட்டு முறைகளும் மாறினாலும் வழிபடுவது இறைவன் ஒருவனைத்தான். இதை இந்த ஊரில் அனைவரும் உணர்ந்துள்ளதை இவ்விழா மூலம் அறியலாம்,” என்றார். பக்தசபா தலைவர் சுந்தர்ராஜப்பெருமாள் நன்றி கூறினார்.