பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
தேனி: தீய குணங்களை அழித்து வெற்றி பெற வைக்கும் விஜய தசமி நிகழ்ச்சியை உலக சரித்திரங்களுடன் ஒப்பிட்டு விளக்கும் ஆன்மிக கொலு பொம்மை கண்காட்சி காண, தேனியில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நவராத்திரி கொலு உற்சவம் அக்.,2ம்தேதி துவங்கி 11ம்தேதி விஜயதமியுடன் நிறைவு பெறுகிறது. கோயில்கள், ஆன்மிக அமைப்புகள், பல இல்லங்களில் கொலு வைத்து வழிபாடு நடத்தி இறைஅருள் பெருகின்றனர்.
தேனி என்.ஆர்.டி.ரோடு, பிரஜாபதி பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஷ்வா வித்யாலயா அமைப்பின் சார்பில் உலக சரித்திர நிகழ்வுகளுடன் விளக்கும் ஆன்மிக கொலு கண்காட்சி நடந்து வருகிறது. தினமும் மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை கொலு காண பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆன்மிக விபரம், உலக நடப்பு விஷயங்களை கற்றுத் தரும் வகையில் கொலு அமைத்துள்ளனர். நவராத்திரி சிறப்பு குறித்து அதன் நிர்வாகி விமலா கூறுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த உலகம் சொர்க்கமாக இருந்தது. லட்சுமியை செல்வத்திற்காகவும், மகாலட்சுமியை உள்நோக்கிய தீய சக்திகளை அழிக்கவும், சரஸ்வதி ஞானசக்தியாக வழிபட்டனர். மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து துர் குணங்களை நீக்க கூடியவராக துர்க்கையாக விளங்குகிறார். இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி தேவதைகளாக வழிபடுகின்றனர்.
விஜயதசமி என்பது விஜய என்றால் வெற்றி, தசம் என்றால் பத்து குணங்களையும் அழித்து வெற்றி அடைவதாகும். இதற்காகவே நவராத்திரி கொண்டாடுகின்றோம். இந்த உலகம் தெய்வீக குணத்தால் சொர்க்கமாக இருந்தது. அது நரகமாக மாறி வருகிறது. சொர்க்கமாக இருந்த உலக ராமராஜ்யமாகவும், நரக உலகத்தை ராவண ராஜ்யமாக கூறுகின்றனர். நம்மை அறியாமல் பக்தி செய்தோம்: மகான்களையும், தர்ம தேவதைகளையும் சிலைகளாக வைத்து வழிபடுகிறோம். ஒவ்வொரு மனிதரிடமும் காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை தலைதுாக்கியுள்ள உலகத்தை ராவண ராஜ்யம் என்கின்றனர். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மை அறியாமல் பக்தி செய்தும், தேவர்களை அறியாமலே கொண்டாடினோம். கடவுள் பிரம்மா குமாரிகள் மூலம் அறியாமையில் இருக்கும் மக்களை விழித்து கொள்ள எச்சரித்துள்ளார். இதனால் மறுபடியும் உலகம் சொர்க்கமாக போகிறது. தர்மத்தை நிலை நாட்ட வந்த பிரம்மா அதனை விளக்கும் வகையில் சக்தியுகம், திரேதாயுகம் கடந்து துவாபரயுக பக்தி ஆரம்பிக்கிறது. உலகம் தெய்வீக தன்மையில் இருந்து மனித தன்மையாகிறார்கள். கலியுகத்தால் உலகில் அதர்மம் அதிகரித்து விட்டது. கீதையில் கூறியது போல் அதர்மம் எப்பொழுதெல்லாம் தலைதுாக்குகிறதோ அப்போது தர்மத்தை நிலைநாட்ட நானே வருவேன் என பிரம்மா தர்மத்தை நிலைநாட்ட வந்து விட்டார். அதனை சரித்திர சான்றுகளுடன் நிரூபிக்கவே இந் நவராத்திரி கொலு,”என்றார்.