சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்தார், மேலும் யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மாவையும் தண்டித்து, அவரது மனைவியான கலைமகளின் மூக்கை அரிந்தார். சாப விமோசனம் பெறுவதற்காக சரஸ்வதி, தன் கணவருடன் சீர்காழி சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், நாவினாள் மூக்கரித்த நம்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும் நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் ஒரு முறையேனும் சீர்காழி சென்று அங்கு அருள்புரியும் தோணியப்பரையும், திருநிலைநாயகி அம்பாளையும், திருஞானசம்பந்தரையும் வணங்கி வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு, இத்தலத்தில் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டி ஞானக்குழந்தை ஆக்கினாள்.