பதிவு செய்த நாள்
11
அக்
2016
12:10
சென்னை: பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில், சரஸ்வதி பூஜையை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில், ஏராளமான பள்ளிக் குழந்தைகளுக்கு, பூஜித்த எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பென்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில், ஆண்டுதோறும், நவராத்திரிவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, அக்., 2ம் தேதி, நவராத்திரி விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நேற்று காலை, வித்யாலட்சுமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, வேதம், பிரபந்த முறைப்படி, மகாலட்சுமியை பூஜிக்கும் ஸ்ரீசுத்த ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஆராதனையில் வைத்து பூஜிக்கப்பட்ட எழுது பொருட்கள், பள்ளி குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று, பார் வேட்டை உற்சவம் நடக்கிறது.