பதிவு செய்த நாள்
17
அக்
2016
11:10
மணலி புதுநகர்: மணலி புதுநகர், அய்யா கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மணலி புதுநகரின், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது; புரட்டாசி மாதத்தில், ௧௦ நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 7ம் தேதி, திருநாமக் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பத்து நாள் திருவிழாவில், அய்யா வைகுண்ட தர்மபதி, காளை, அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர் முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்து நாட்களிலும், திரு ஏடு வாசிப்பு, பணிவிடை- உகபடிப்பு, பணிவிடை- உச்சிப்படிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. விழாவின் 10ம் நாளான நேற்று மதியம், 12:00 மணிக்கு அய்யா திருத்தேரில் எழுந்தருளி, வீதி வலம் வந்தார். இந்நிகழ்வில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, அய்யா ஹர ஹர சிவ சிவ என, முழங்கியபடி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல், இரவு, பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு, அதிகாலை, 1:45 மணிக்கு அய்யா, பூம்பல்லக்கில் பதிவலம் வருதல், 2:30 மணிக்கு, திருநாமக் கொடி அமர்தல் நிகழ்வுடன் விழா நிறைவு பெறும். ஆண்டுக்கொரு முறை நடக்கும், 10 நாள் திருவிழாவில், சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், பாதுகாப்பிற்காக, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.