பாரதியாருக்கு குள்ளச்சாமி என்ற மகானிடம் நட்பு ஏற்பட்டது. ஒருநாள் புதுச்சேரி கடற்கரையில் குள்ளச்சாமி தன் முதுகில் சாக்குப் பையைச் சுமந்தபடி சென்றார். அதில் குப்பை இருந்தது. பதறிப்போன பாரதியார், “என்ன சாமி..! இப்படி குப்பையைச் சுமக்கலாமா? தூக்கி எறியுங்கள்,” என்றார். “இந்த குப்பையை பெரிசா சொல்றியே... நீ உன் மனசுக்குள்ள எவ்வளவு குப்பையைச் சுமந்திட்டிருக்க தெரியுமா? ” என்று சொல்லி சிரித்தார் சாமி. தன்னிடம் இருந்த குப்பையை தூர விட்டெறிந்தவர், “இதோ... நான் நொடியில எறிந்து விட்டேன்.உன்னால் இதுபோல முடியுமா?” என்று சொல்லி இரு கைகளையும் தட்டிக் காண்பித்தார். மகானின் கேள்வி பாரதியாரை வெகுவாகப் பாதித்தது. கண்ணுக்குத் தெரியும் சாதாரண குப்பையை விட, மனதிற்குள் பேராசை, கோபம், வருத்தம் என எண்ணக்குவியல்கள் குப்பையாக கிடப்பதை நாம் உணர்வதில்லை. அவற்றைத் தூக்கி எறிய வேண்டியது அவசியம்.