பதிவு செய்த நாள்
27
அக்
2016
12:10
திருப்பதி திருமலையப்பனுக்கு பல்வேறு நித்திய சேவைகள் உண்டு. அச்சேவைகளின்போது எம்பெருமானுக்கு பலவகையான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. இவ்வாபரணங்கள் மலையப்பனின் அழகால் மேலும் அழகுடன் மிளிர்வதுபோல் இருக்கும். அவ்வாபரணங்களுடன் எம்பெருமான் எழுந்தருளும் காட்சியை வருணிக்க வார்த்தைகளே இல்லை. அத்தனை விசேஷமான ஆபரணங்கள் குறித்து சிலவற்றை இக்கட்டுரை மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
திவ்விய மங்களத் திருமேனி வடிவம்: சுயம்புவான திருமலையான் பக்தர்களுக்கு தமது திவ்விய மங்களத் திருமேனி வடிவோடு தரிசனம் அளிக்கின்றார். எம்பெருமான் விக்ரஹம் வரத ஹஸ்த கடிஹஸ்த முத்திரையில் உள்ளது. பக்தர்கள் எம்பெருமானின் இந்த காணக்கிடைக்காத மூர்த்தியை தரிசனம் செய்து பரவசம் அடைகின்றார்கள். மூலமூர்த்தியை த்ருவ மூர்த்தி, மூல மூர்த்தி என்றும் கூறுவர். நின்ற கோலத்தில் எழுந்தருளிய திருமலையான் திருமேனி இடது புறம் 2 டிகிரி வரை சாய்ந்துள்ளதுபோல தோன்றும். ஸ்வாமியின் பாதத்தின் அருகே ஸ்ரீசக்கரம் உள்ளது. எம்பெருமானின் திருமேனி மிகவும் மென்மையாக காட்சியளிக்கின்றது.
எம்பெருமானின் திருவுருவ வடிவம் சுமார் எட்டு அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமலையப்பன் பார்வையில் திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எல்லோருக்கும் சமநோக்கினை அளிக்கின்றார். எம்பெருமானின் முடிதோள்பட்டை வரை நீண்டு அழகாக காட்சியளிக்கின்றது. அவருடைய காதுகளில் அழகிய இரு குண்டலங்கள் உள்ளன. சங்கினை போன்ற கழுத்திற்கு கீழேயுள்ள நான்கு கைகளில் மேலிரண்டு கைகளில் ஸ்ரீசக்கரம், சங்கு இருக்கும். கீழிரண்டு கைகளின் வலது கை வரத ஹஸ்தமாகவும் இடது கை கடி ஹஸ்தமாகவும், ஸ்வாமியின் இதயத்தில் பெரியபிராட்டி இருப்பதும், ஸ்வாமியின் கால்களும் பாதங்களும் ஸ்வாமியின் கம்பீர தோற்றத்தைக் காட்டுகிறது.
அரிதான ஆபரணங்கள்: திருமலையானுக்கு ஆங்கிலேயர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், முனிவர்கள், பக்தர்கள் பலவிதமான ஆபரணங்களைச் சமர்ப்பித்து மகிழ்ந்துள்ளனர். இவ்வாபரணங்களில் முதன்முதலில் ஆகாச ராஜாதான் தன்னுடைய மருமகனுக்கு தங்க கீரிடத்தினை சமர்பித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கிருஷ்ணதேவராயர் என்னும் பேரரசர் தான் போரில் வெற்றி பெற்று திரும்பும்போதெல்லாம் ஒவ்வொரு ஆபரணத்தை திருமலையானுக்கு சமர்பிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவற்றில் முக்கியமானது மலையப்ப ஸ்வாமிக்கு அணிவிக்கும் குண்டு கிரீடம், மூலவருக்கு மற்றும் உத்ஸவ மூர்த்திக்கு விசேஷ உத்ஸவத்தின்போது அணிவிக்கப்படும் மரகதமாலை, தங்க வாள், மரகத்தினாலான தங்க வாள், வைரத்தினாலான கண்ட்டாபரணம், நவரத்தின கிரீடம், மூன்று வடம் மாலை, மூன்று வரிசை கண்ட்டா ஹாரம், இந்த்ர நீலம், கோமேதக கல், மாணிக்கம் முதலியவை. ரத்ன, நவரத்தின கீரீடம் மூன்று வடம் மாலை, கைகவசம் முதலானவை. 20.12.1985 அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2.5 கிலோ தங்கம், பல ஆயிரம் மதிப்புள்ள கிரீடம் எம்பெருமானுக்கு சமர்பித்தது. இதுபோல எம்பெருமானை அலங்கரிக்கும் மரகத மாலைகள் இரு வெவ்வேறு நீளத்திலும், ஐந்து வடம் லட்சுமி மாலையும், காதுகளுக்கு இரு ரத்ன குண்டலங்களும், தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதித்த சங்கு சக்ரம், இடது மற்றும் வலது கை கவசம் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களையும் காணலாம். சிறப்பு நாட்களில் மட்டும் தான் தங்க பீதாம்பர ஆபரணங்களால் அலங்காரம் செய்வர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு முன்னர் கோவிலை கவனித்து வந்த மஹந்துகள் பீதாம்பரம் மற்றும் மகர மாலையைச் சமர்ப்பித்தனர்.
தினமும் துளசி மாலை, லட்சுமி மாலை, தசாவதாரத்தை நமக்கு பிரதிபலிக்கும் தசாவ தார மாலை, சஹஸ்ர நாம மாலை, தசாவதாரம் பொறித்த ஒட்டியானம் முதலிய ஆபரணங்களால் எம்பெருமான் நமக்கு காட்சியளிக்கின்றார். திருமலையானின் வீரத்தின் அடையாளமாக அவர் இடுப்பில் தங்க வாள் (சூரிய கடாரி) இவ்வாறாக மூலமூர்த்திக்கும், உத்ஸவ மூர்த்திகளுக்கும் பல்வேறு ஆபரணங்கள் உள்ளன.
திருமாலின் திருப்பாதத்தை பார்த்து வணங்க வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. திருமலையான் திருப்பாதங்கள் மீது பொன்தகடினால் ஆன பத்ம பீடம் இரு கால்களுக்கும் அழகாக அலங்கரிக்கின்றனர். தங்கப் பீதாம்பரம், கைகளை அலங்கரிக்க தங்கக் கவசங்கள், சாதாரண பெரிய தங்கக் கவசம், வலது தங்க நாக ஆபரணம், நாகாபரணத்தோடு சேர்ந்த கடியம், தங்கச் சாதாரண கை கவசம், கங்கணம் (வளையல்), ரத்ன மாலைகள், தங்கத்தினாலான சஹஸ்ர நாம சாலிகிராம மாலை, தங்க ஒட்டியானம், ஆறு வரிசையில் தங்கப் பூநூல், அஷ்டோத்தர சதநாமாவளி தங்க மாலை, நான்கு வரிசை தங்க முஹரி மாலை இரண்டு தோள்பட்டை ஆபரணம், சந்திர வடிவிலுள்ள தங்க கண்ட்டே, தங்க கழுத்து மாலை, இரண்டு வடம் தங்கமாலை, பாகடாலு, தங்க சாதாரண கண்ட்டியா, சுவாமியுடைய மகர தோரணம் முதலியவை எம்பெருமானுக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்களாகும். 12 ஆண்டுகளாக 28,369 வைரங்களை பயன்படுத்தி தங்கத்தினாலான 67.5 செ.மீ. உயரமுள்ள வைர கிரீடத்தினை தயாரித்து 20.12.1985 ஸ்வாமிக்கு சமர்ப்பித்தனர்.
நித்திய சேவையில் ஸ்வாமி ஆபரணங்கள்:
1. தங்க பத்மபீடம்: திருவடியின் கீழ் இருக்கும்.
2. தங்கத்தினாலான திருப்பாதங்கள்: திருப்பாதங்களுக்கு.
3. சிறுகஜ்ஜினுபுராலு: திருப்பாதங்கள் மேலே பாதத்திற்கு அணியும் ஆபரணம்.
4. பாகடாலு: கால்களில் அணியும் ஆபரணம்.
5. காஞ்சி குணம்: அரைஞாண்கயிறு.
6. நாகாவேஸ்பண உதரபந்தம் : மத்தியாபரணம்.
7. சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம், பஞ்சவியூஹம், ஸ்ரீபூதேவி தாயார், எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞான் கயிறு.
8. சிறிய கழுத்து மாலை: கழுத்து மாலை.
9. பெரிய கழுத்து மாலை: எம்பெருமானின் வக்ஷஸ் தலம் (இதயம்) வரை
அணிவிக்கப்படும் மாலை
10. தங்கபுலிநக மாலை: திருமார்பில் அணியப்படும்.
11. ஐந்து வரிசை கோபுஹாரம்: தொப்புள்கொடி பகுதியில் அணியப்படும்.
12. தங்க (யக்ஞோபவீதம்) பூநூல் - ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூநூல்.
13. சாதாரண (யக்ஞோபவீதம்) பூநூல்: சன்னவதியால் தயாரிக்கப்பட்ட பூநூல்.
14. துளசி இதழ் மாலை: கடிஹஸ்தமாலை 108 இலைகளுடைய மாலை.
15. சதுர்புஜ லட்சுமி மாலை : ஜானு பரியந்தம். (108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)
16. அஷ்டோத்தர சதநாம மாலை: ஜங்காபரியந்தம், 108 அஷ்டோத்திர சம நாமாவளி நாணய மாலை.
17. சஹஸ்ர நாம மாலை : பாதபரியந்தம். 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.
18. சூரிய கடாரி: நாப்யாதி பாதபரியந்தம். தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.
19. வைகுண்ட ஹஸ்தம்: வலது கை
20. கடிஹஸ்தம் : இடது கை
21. கடியாலம்: கங்கணம் (வளையல்)
22. நாகாபரணம் : புஜதண்ட பூஷனாங்கி
23. புஜகீர்த்திகள்: புஜ பூஷனாங்கிகள்
24. கர்ணபத்திரம்: கர்ண பூஷனாங்கிகள் (காது)
25. சங்குசக்கரம் : பின்னிரு கைகளில்.
26. கிரீடம் : தலைக்கு.
விசேஷ தினங்களில் அலங்காரம்:
1. ரத்ன கிரீடம்
2. மேருபச்சகாருத்மதம்
3. ரத்தினங்கள் பதித்த சங்குசக்கரம்
4. ரத்தினங்கள் பதித்த கர்ண பத்ரங்கள்
5. ரத்ன வைகுண்ட ஹஸ்தம்
6. ரத்ன கடிஹஸ்தம்
7. தங்க பீதாம்பரம்
8. 9. 10. ரத்னமகரண்டீ
(இவை மூன்றும் ஒரே வகையான ஆபரணங்கள்)
மேலும் காணும் பத்து ரத்ன ஆபரணங்கள் விசேஷ நாட்களில் மட்டும் எம்பெருமானுக்கு அணிவிக்கப்படும். இவ்வாறாக திருமலையப்பனுக்கு அணிவிக்கப்படும் ஒவ்வொரு அணிகளின் பின்னும் ஓர் வரலாறு இருப்பதை அறியலாம். வியாழக்கிழமை சேவை அலங்காரம்: திருமலையப்பனுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையில் அழகிய மலர்களால் அர்ச்சனை சேவையும் நடைபெறுகிறது. அன்றே ஸ்வாமிக்கு திருப்பாவாடை சேவை கடவுளுக்கு செய்வார்கள். அன்று அதிகாலை முதல் ஏகாந்த சேவை வரை எல்லா சேவைகளும் முடிந்த பின்னர் கோயில் நடைசாற்றும் முன்னர் திருமலையப்பனுக்கு தங்க, வைர, ரத்ன, பீதாம்பர ஆபரணங்களை அகற்றி பத்திரப்படுத்துவர். கடவுளின் பாதி ஊர்த்தவ புண்ட்ர பச்சை கஸ்தூரி கற்பூரம் குறைக்கப்படும். இதைத்தான் நேத்ர தரிசனம் என்று அழைப்பர்.
அன்று 24கஜ அடிபட்டு வேஷ்டியும், 12 கஜ போர்வையும் கடவுளுக்கு அணிவிக்கப்படுவதை பக்தர்கள் கண்டு பரவசமடையலாம். அப்போது எம்பெருமானின் திருப்பாதம், திருக்கை கவசங்கள், சங்கு, சக்கரம், காதணிகள் மற்றும் தங்க சாலிகிராம மாலை மட்டும் அணிவிப்பார்கள். இவ்வாறு எல்லா வியாழக்கிழமையும் தெய்வீக ஒளியுடன் ஸ்வாமியின் இதயக்கமலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் நேத்ர தரிசனமாக நமக்கு தரிசனம் அளிக்கின்றார். பிரம்மோத்ஸவத்தில் கருட வாகனம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருட வாகனத்தன்று மூலமூர்த்தியின் அணிகலனான மகரகண்டீ, லக்ஷ்மி மாலை, சஹஸ்ர நாம மாலையை திருமலையப்ப ஸ்வாமிக்கு அணிவிப்பர். அன்று தி.தி. தேவஸ்தானத்தில் பணிப்புரிந்து ஸ்வாமி சேவையை செய்யும் ஊழியர்களால் செய்யப்பட்ட தங்க மாலையும் அணிவிப்பார்கள். இவ்வாறு பல்வேறு அணிகலன்களை அணியும் திருமலையானை தரிசித்தால் பக்தர்களின் பாவங்கள் அழிந்து புனிதர்கள் ஆவார்கள் என்பது திண்ணம்.