ராமநாதபுரம் : கோயிலுக்கு செல்லும் பொது பாதையை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருப்புல்லாணி அருகே சிலையப்பன் வலசை கிராமத்தலைவர் முனியாண்டி, கோயில் நிர்வாகத் தலைவர் தவசிமணி தலைமையில் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனு: சிலையப்பன் வலசை கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக நாங்கள் வழிபடும் வில்லியான் கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய் நாட்களில் பூஜை நடக்கிறது. ஆண்டு தோறும் மாசி களரி சிறப்பு விழா நடக்கிறது. கோயிலுக்கு செல்ல தினைக்குளம்-பிச்சாவலசை ரோட்டில் இருந்து 3 மீ., அகல பாதை உள்ளது. இந்த பாதை கோயிலுடன் முடியாமல் நாடார் குடியிருப்பு முதல் சேதுக்கரை ரோடு வரை செல்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த பாதையை கீழக்கரையை சேர்ந்த மிதார் மைதீன் அடைந்து வருகிறார். கடந்த 1954ல் அரசு கிராம கணக்குகளில் எந்த அளவு பாதை பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த அளவு பாதையை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.