பதிவு செய்த நாள்
10
நவ
2016
05:11
திருக்கயிலையில் சிவசன்னதியில் தொண்டு புரிந்து கொண்டிருந்தவர் வீதஹவ்யர். ஈசன் ஆணையால் ஒரு சமயம் அவர் யமனுடன் நரகத்தைப் பார்த்து வந்தபோது வழியில் தெரிந்த ஒரு கல் குன்றைப் பற்றி விசாரித்தார். அதற்கு எமன், சுவாமி! தாங்கள் முந்தைய பிறவியில் பசித்தவருக்கு அன்னதானம் செய்தீர்கள். ஆனால் கல் மண் நீக்காது அலட்சியமாகச் சமைத்து அளித்ததன் பலன் இப்படிக் குன்றாக உள்ளது. என்று கூறினார். உட னே வீதஹவ்யர் ஆ! என்ன சொல்கிறீர் என் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்தப் பாவ மலையை நான் உண்டே கரைப்பேன் என்று சபதம் போட்டார். நரகத்தில் ஓரிடத்தில் சில பெரியவர்கள் பசி, தாகத்தால் அவதிப்படுவதை வீதஹவ்யர் பார்த்தார். அவர்களிடம் சென்று காரணத்தை விசாரித்தார். அவர்களும் முனிவரே! எங்களுக்கு நீர் வார்த்து தர்ப்பணம் செய்து கரையேற்றப் புத்திரர்கள் இல்லாததால் புத் எனும் நரகத்தில் உழல்கிறோம். என்று அழுகா குறையாக சொன்னார்கள்.
இதைக் கேட்ட வீதஹவ்யர் கவலைப்படாதீர்கள். உங்களின் துன்பத்தை நான் நீக்குவேன் என்றார். நரகில் இடர்பட்டு வந்த பெரியவர்கள் தமது முன் னோர்கள் என்பதை வீதஹவ்யர் புரிந்து கொண்டார். பிறகு அவர் மீண்டும் கயிலைக்கு திரும்பினார். எம்பெருமானே, என் பாவ மலையைக் கரைக்கவும் என் முன்னோர்களைக் கடைத்தேற்ற சத்புத்திரனைப் பெறவும் நான் பூலோகம் செல்ல எனக்கு அருள்புரியுங்கள் பகவானே என்று வேண்டினார். சிவபெருமானும் ததாஸ்து பவ. என்ற மந்திரத்தைச் சொல்லி வாழ்த்தி அனுப்பினார். அடுத்த பிறவியில் வீதஹவ்யர் திருவையாற்றில் அந்தணர் குலத்தில் பிறந்தார். விவரம் தெரிந்த நாள்முதல் கல்லை உணவாக உண்டார். அதனால் சிலாதர் எனும் பெயர் பெற்றார். அவரது பாவமும் தொலைந்தது. சிலாதர் சித்திரவதி என்னும் உத்தமியை மணந்தார். ஒருநாள் அவரது மனைவி சுவாமி, நம் குலம் விளங்கப் பிள்ளை இல்லையே! என கூறினாள். வெகுகாலமாக நமக்கு பிள்ளை இல்லை என்பதை நினைத்து கவலை படாதே தேவி, கருவில் பிறக்காத அற்புதப் புதல்வன்தான் நமக்கு வேண்டும். அதற்காக ஈசனை வேண்டித் தவம் செய்வேன் என கூறினார் சிலாதர்.
சிலாதரும் தவம்செய்ய ஆரம்பித்தார்! சிலாதரின் தவத்தை மெச்சி சிவபெருமான் தன்னை மறந்து அவருக்குக் காட்சி தந்தார். இறைவா! என் குலமும் உலகமும் உய்யவும், சிவநெறி ஈடேறவும் ஒரு புதல்வனை அருள வேண்டும் என வேண்டினார். வீதஹவ்யா! சைலமலையில் புத்திரகாமேஷ்டி யாகம் செய். என் அம்சம் மிக்கப் புதல்வன் தோன்றி, அவனால் உன் குலம் புகழில் ஓங்கும் என்றார் சிவபெருமான். சிலாதர் யாக பூமியின் மீது பொற்கொழு பூட்டிய கலப்பையால் உழுதபோது ஒரு தங்கப்பெட்டி வெளிப்பட்டது. அப்போது பூ மழை பொழிய, வேதவொலி முழங்க, அமர துந்துபி ஒலித்தது. பெட்டியினுள் அணிகலன்கள் அணிந்த ஆண் குழந்தை இருந்தது. சிலாதரும் அவரது மனைவியும் ஆ! என்ன இது ஆச்சரியம் என்று வியப்புடன் பார்த்தனர்! ஆஹா, சிவனருளால் நம் கலி தீர்க்க வந்த தவப்புதல்வன் இவன் தான் என்று சிலாதர் மனைவி சொன்னதும் சிலாத ரும் ஆம் தேவி சிவனருளால் வந்த இவனை ஜபேஸ்வரன் என்றே அழைப்போம் என்று சொன்னார். ஜபேஸ்வரரின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. சிலாதரின் அழைப்பின் பேரில் மித்திரன், வருணன் ஆகிய தேவர்களும் கலந்து கொண்டனர்! தேவர்கள் அங்கு தய ங்கி நிற்பதைக் கண்டார் சிலாதர்.
சிலாதர் தேவர்களை பார்த்து ஏன் இப்படி நிற்கின்றீர்கள் எனது மகனை ஆசிர்வதியுங்கள் என்று கேட்டார். சிலாதரே, உமது மகனை வாழ்த்துவதற்கு விதிப்படியான அவனது அற்ப ஆயுள் எங்களைத் தடுக்கிறது. என்று தேவர்கள் கூறினர். என்ன சொல்கிறீர்கள்? ஆ, என் மகனுக்கு அற்ப ஆயுளா? என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சிலாதர். ஜபேஸ்வரன் தன் அற்ப ஆயுளைப் பற்றி அறியாவண்ணம் சிலாதரும் அவரது மனைவியும் அவனைச் சீராட்டி வளர்த்தனர். ஆனால் ஒரு நாள்... தாயே, தந்தையே, நான் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டேன் என்பது எனக்குத் தெரியும். மகாதேவனை ஆராதித்து அவர் அருளால் என் ஆயுளை நீட்டிப்பேன். கவலை வேண்டாம் தங்களுக்கு என்று ஜபேஸ்வரன் கூறினார். ஐயாரப்பன் கோயிலை அடைந்து, அரிஅயன் தீர்த்தத்தில் மூழ்கி ஜபேஸ்வரன் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்தான். நீர் வாழ் ஜந்துக்கள் அவனைக் கடித்து உதிரத்தை உறிஞ்சின. ஆனாலும் சித்தத்தை சிவன்பால் வைத்துத் தவம் செய்தான். சில காலம் கழித்து அவனது ஒப்பற்ற தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் உமையுடன் அவன்முன் தோன்றி அவனைத் தடவிக் கொடுத்தார். உடனே அவன் உடல் பொன்போல் ஒளிர்ந்தது.
சிவபெருமானையும், உமையாளையும் கண்டவுடன் ஜபேஸ்வரன் ஐயனே! அம்மையே என வணங்கினான்! ஜபேஸ்வரா, நீ எனது பஞ்சாக்ஷர நாமத்தை உன்னை மறைந்து ஆழ்ந்து ஜபித்ததால் என்னை ஒத்தவனாகவே விளங்குவாய். வேறு வரம் கேள் மகனே! என்று சிவபெருமான் கூறினார். ஐயனே! வேத, சிவகலை ஆகமங்களையும் அவற்றின் உட்பொருளையும் தாங்களே எனக்கு உபதேசித்து அருள வேண்டும். சிவபெரு மான் ஜபேஸ்வரனுக்கு பஞ்ச நதிகளையும் வரவழைத்து அபிஷேகம் செய்தார். சகல கலை ஞானங்களையும் அறிந்தவனான நீ இன்று முதல் நந்தி தேவன் என்று எல்லோராலும் அழைக்கப்படுவாய். இன்னும் வரம் கேள் மகனே என்று சிவபெருமான் கூறியதும், ஜபேஸ்வரனும் ஐயனே! சிவனடி யார்கள் விரும்பும் 16 பேறுகளையும் எனக்குத் தந்தருள வேண்டும் என கேட்டான். தந்தோம் என்று கூறி அந்த வரத்தையும் தந்தார். ஆதிமூர்த்தியே! யாம் ரிஷப வடிவில் உம்மைத் தாங்கி உலகை வலம் வர வேண்டும். இதற்கு நீங்கள் அருள்புரியவேண்டும் என வேண்டினான். நந்தீ! உன்னைப் போல தவம் புரிந்தவர் எவருமில்லை. நீ எம்மைப் போல் நித்தியமாக யாவராலும் வணங்கப் பெறுவாய். இந்தக் கணமே ரிஷப உருவம் கொள்வாய்! என வரமளித்தார் சிவபெருமான்! தேவர்களே! இந்த நந்தீசனைச் சகல கணங்களுக்கும் அதிபனாக நியமித்தோம். விநாயகன், முருகன்போல் இவனும் எனக்கு மகன். சிவஞானத்தைப் போதிக்க இவனே ஆசாரியன் என்று சிவபெருமான் கூறினார். உடனே தேவர்கள் அனைவரும் நந்திதேவர் வாழ்க! வாழ்க! என கோஷமிட்டனர்.
ஈசனும் உமையும் திருவையாற்றில் வியாக்ரபாதரின் புதல்வி சுயம்பிரபை என்ற கன்னிகையை திருநந்திதேவருக்கு மணம் செய்வித்தனர். அப்போது அரம்பையர் ஆடினர், நாரதரும் மற்ற முனிவர்களும் பாடினர், துந்துபி முழங்கியது. திருமணம் முடிந்த பின்பு சிவபெருமானும், உமாதேவியும் நந் தியெம்பெருமானையும், சுயம்பிரபை தேவியையும் அழைத்துக் கொண்டு திருக்கயிலைக்கு ஏகினர். நந்தீசா, விதிப்படி உன் பூலோக வாழ்க்கை நிறைவுற்றது. உன் தவத்தால் உன் குல முன்னோர்களும் வீடுபேறு பெற்றார்கள். இனி கயிலையில் எம்முடன் நிரந்தர வாசம் செய்வாய் என்று கூறினார். நந்தீசர் சிவபெருமானுக்கும், அம்மையாருக்கும் தாழ்பணிந்து நான் கேட்ட வரத்தை எல்லாம் தந்து அருளிய தங்களுக்கு என் வாழ்நாள் முழுதும் தங்களுக்கு சேவை செய்து உங்களின் திருப்பாதத்திலேயே இருப்பேன் என்றார். இப்படியாகத்தான் நந்தீசர் கைலாயத்தில் நித்தியவாசம் செய்கிறார்.