பதிவு செய்த நாள்
10
நவ
2016
05:11
யமுனை ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் இருந்தாள். அவளின் வருத்தத்துக்கான காரணத்தைக் கேட்டாள் கங்கை. உலகில் உள்ள எல்லாச் சகோதரர்களும் தங்கள் சகோதரியை அடிக்கடி சந்திக்கிறார்கள். பாசத்துடன் இருக்கிறார்கள். ஆனால், என் அண்ணன் யமதர்மன் இப்போதெல்லாம் என்னை வந்து பார்ப்பதுகூட இல்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது! என்றாள் யமுனை. தோழி மனம் வருந்துவதைக் காணச் சகிக்க முடியாமல், யமதர்மனைப் போய்ச் சந்தித்தாள் கங்கை. நீ வந்து பார்க்கவில்லை என்று மிகவும் துக்கப்படுகிறாள் உன் தங்கை. அவளை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரக்கூடாதா? என்று கேட்டாள்.
என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் கங்கா. நான் யமுனையை இனி சந்திப்பதாக இல்லை என்றான் யமதர்மன். திடுக்கிட்ட கங்கை, அதற்கான காரணத்தைக் கேட்டாள். கிருஷ்ணாவதாரம் நினைவிருக்கிறதா? வசுதேவருக்கும், தேவகிக்கும் சிறையில் அவதரித்தார் கண்ணன். அப்போது ஒலித்த அசரீரியின் கட்டளைப்படி, குழந்தை கண்ணனை கோகுலத்தில் விடுவதற்காகக் கிளம்பினார் வசுதேவர். யமுனை அவருக்கு வழிவிடவில்லை. போதாக்குறைக்கு, தன்னில் வெள்ளத்தை வேறு உண்டாக்கிக்கொண்டாள். கண்ணபிரானையே அவமதித்த, அலட்சியப்படுத்திய அவளுடன் எனக்கென்ன பேச்சு? என்றான் யமதர்மன். கங்கை என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள். அப்போது வானிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது. யமதர்மா, யமுனையை நிந்திக்காதே! கண்ணான என்மீது கொண்ட அன்பினால்தான் அவள் அப்படிச் செய்தாள். நான் அவதரித்ததை யமுனை அறிந்துகொண்டாள். என்னைச் சுமந்தபடி, தன்னைத் தாண்டித்தான் வசுதேவர் செல்லப் போகிறார் என்று தெரிந்ததும், என் பாதங்களைக் கழுவி புண்ணியம் தேடிக்கொள்ள விரும்பினாள்.
ஆனால், மழைத்தூறல் காரணமாக வசுதேவர் கூடையில் வைத்து என்னைத் தன் தலைமீது வைத்துக்கொண்டுவிட்டார். எனவேதான், யமுனை தன் நீர்ப்பெருக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தாள். வசுதேவரின் நாசிக்கருகே அவள் உயர்ந்தவுடன், குழந்தை உருவில் இருந்த நான் என் பாதத்தைச் சற்றே வெளியில் நீட்டி, யமுனையைத் தொட்டேன். தன் நோக்கம் நிறைவேறியவுடன் யமுனையின் வெள்ளம் குறைந்து, வேகம் அடங்கியது. இரண்டாகப் பிளந்து வழிவிட்டாள். அவள் செய்தது தெய்வக்குற்றமாக இருந்தால், அவளுக்கு தண்டனை கிடைத்திருக்குமே! மாறாக, அவள் செய்தது தெய்வ ஆராதனை! அதனால்தானே யமுனா நதி தீரங்களாகப் பார்த்து, என் பால்யலீலைகளை நடத்தி, அவளை மகிழ்வித்தேன் என்றது அக்குரல். யமதர்மன் ஆனந்தம் அடைந்தான். யமுனையை வாழ்த்தினான். யமுனா நதியில் நீராடுவோருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். யம பயமும் இருக்காது என்று அருளினான்.