பதிவு செய்த நாள்
15
நவ
2016
03:11
உத்தமசோழபுரம்: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சேலம் கரபுரநாதர் கோவில், சென்னகிரி வட்டமலை நகர் மருந்தீசர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. சேலம், உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலில் உள்ள, மூலவர் சிலைகள் மற்றும் பரிவார தேவதை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் பலவிதமான காய்கறி கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலையில் மூலவர் கரபுரநாதருக்கு, 500 கிலோ அரிசியை கொண்டு சமைக்கப்பட்ட அரிசி சாதத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது. இதே போல், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரி வட்டமலை நகர் மருந்தீசர் கோவில் மூலவர் பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம், நெய்காரப்பட்டி, பூலாவரி, உத்தமசோழபுரம், அரியானூர் மற்றும் வீரபாண்டி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* இடைப்பாடி, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது முழுவதும் அரிசி சாதத்தால் மூடப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அந்த சாதத்தை பக்தர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து மக்கள் தரிசனம் செய்தனர்.
* ஓமலூர், செவ்வாய்ச்சந்தை அருகே உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில், பவுணர்மியையொட்டி, நேற்று காலை, 9:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் துவங்கியது. பின்னர், பழங்கள் மற்றும் காய்கறி மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 208 கிலோ அரிசியில் சாதம் வடித்து, மூலவர் காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
* சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள, ஈஸ்வரன் கோவிலில் நேற்று ருத்ரஹோமம் நடத்தப்பட்டு சோமேஸ்வரருக்கு அன்னதால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
* ஆத்தூர், கோட்டை பகுதியில் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், 100 கிலோ பச்சரிசி அன்னத்தால், காயநிர்மலேஸ்வரர் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருமேணி முழுவதும் ஒரு டன் கொண்ட கத்தரி, வெண்டை, அவரை உள்பட, 20 வகை காய்கறிகளுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.