ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று பெய்த மழையால் திருக்கோயில் ரதவீதியில் மழை நீர் குளம்போல் தேங்கியது. பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். ராமேஸ்வரத்தில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. அரைமணி நேரம் தொடர்ந்த இந்த மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோயில் ரதவீதிகள், நகராட்சி அலுவலகம், மார்க்கெட் தெருவில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் தேங்கியதால் அவற்றை தாண்டி கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். மழை ஓய்ந்து ஒருமணி நேரத்திற்கு பின்னரே தண்ணீர் வடிந்தது. இதையடுத்து பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர்.