நாகப்பட்டினம் மாவட்டம் திருவாலி திருநகரி பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. பெருமாள் பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த லட்சுமியை, இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர் திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட வேதராஜபுரம் வழியாக மனைவியுடன் சென்றார். அப்போது திருட்டுத்தொழில் செய்து வந்த, திருமங்கையாழ்வார் அவரை மறித்து வழிப்பறி செய்தார். பெருமாள் திருமங்கையின் காதில் ஓம் நமோ நாராயணா’ என்னும் மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்டார். 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான் திருமங்கையாழ்வாருக்கு மூலஸ்தானத்தில் திருமஞ்சன திருமேனியும், உற்சவ மூர்த்தியும் இருக்கிறது. இவர், நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் பரிசாக பெற்ற வேலை கையில் வைத்திருக்கிறார். சீர்காழியில் உள்ள திரிவிக்கிரமன் கோவிலிலும் திருமங்கையாழ்வார் கையில் வேல் உள்ளது.