திருவண்ணாமலையில் சிவனை மலை வடிவில் தரிசிக்கிறோம். அதுபோல், படைப்புக்கடவுளான பிரம்மா, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகிலுள்ள சதுர்வேதமங்கலத்தில் மலை வடிவில் இருக்கிறார். பாம்பு போல வளைந்த வடிவிலுள்ள மலை என்பதால், இதற்கு ‘அரவன் மலை’ என்று பெயர். இவ்வூரிலுள்ள ருத்ரகோடீஸ்வரரை பிரம்மா மலை வடிவில் வணங்குவதாக ஐதீகம். பிரம்மாவுடன் வந்த கோடி ருத்ரர்களும் இத்தலத்து ஈசனை வணங்கியதால் இவர், ‘ருத்ர கோடீஸ்வரர்’ எனப்படுகிறார்.