பதிவு செய்த நாள்
05
டிச
2016
02:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த தனி பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. வரும், 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ஆயிரம் மீட்டர் காடா துணி மற்றும், 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். தீபம் ஏற்றுவதற்காக, ஏராளமான பக்தர்கள் நெய் காணிக்கை வழங்குவர். இவர்களுக்கு வசதியாக, கோவில், நான்காம் பிரகாரத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இங்கு, ஒரு கிலோ, 200 ரூபாய், அரை கிலோ, 100 ரூபாய், கால் கிலோ, 50 ரூபாய் என, காணிக்கை செலுத்தலாம். மேலும் கோவில், மூன்றாம் பிரகாரத்தில், கொடி மரம் அருகே நெய் காணிக்கை உண்டியல், ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளது. வரும், 9 முதல் ராஜகோபுரம் திட்டி வாசல் அருகே நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு துவங்கப்பட உள்ளது. இங்கு நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், பணமாகவோ, நெய்யாகவோ செலுத்தலாம். பக்தர்கள் ஆன்லைன் மூலம் நெய் காணிக்கை செலுத்துவது குறித்து பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது. இதுகுறித்த, ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு, மார்கழி மாதம் திருவாதிரையன்று நடக்கும் ஆருத்ரா தரிசனத்திற்கு பின், தீப மை பிரசாதம் வழங்கப்படும்.