பதிவு செய்த நாள்
20
டிச
2016
12:12
சின்னாளபட்டி,:கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதற்காக, நாணல் புல் தேடும் படலத்தில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.டிச. 25ல், கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ள சூழலில், இரு வாரங்களுக்கு முன்பே விழா ஏற்பாடுகள் களைகட்டத் துவங்கியுள்ளது. நகர் மட்டுமின்றி குக்கிராமங்களிலும், இதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடக்கிறது. விழாவையொட்டி, சர்ச்கள் மட்டுமின்றி வீடுகள், வணிக நிறுவனங்களிலும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொடைரோடு, அமலிநகர், அம்மையநாயக்கனுார், காமலாபுரம், சின்னாளபட்டி, முன்னிலைக்கோட்டை, என்.பஞ்சம்பட்டி, ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, வக்கம்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல் உள்ளிட்ட பகுதிகளில், பெரும்பாலான குடியிருப்புகளில் குடில்கள் அமைத்துள்ளனர். வைக்கோல் மூலம் உருவாக்கப்பட்ட மாட்டுத்தொழுவத்தில், தெய்வங்கள், தேவதுாதர்கள், கால்நடைகள் போன்ற சிலைகளுடன் வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். பலர் வைக்கோல் காய்ந்தபின் வண்ணம் மாறும் என்பதால், யானைத்தட்டை என்றழைக்கப்படும் நாணல்புல்லை பயன்படுத்துகின்றனர். இதற்காக ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள நாணல் புல் தேடும் படலத்தில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.