பதிவு செய்த நாள்
04
ஜன
2017
12:01
ஊட்டி: தோடர் பழங்குடியின மக்களின், வளர்ப்பு எருமைகளுக்கு உப்பு வழங்கும் ’உப்பூட்டும்’ விழா, ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் நடந்தது. நீலகிரியில், தோடர், கோத்தகர், காட்டு நாயக்கர், பனியர், இருளர் மற்றும் குரும்பர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இன்றும் தங்களது தனித்துவமான, பாரம்பரிய வாழ்க்கை முறையை, தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இவர்களின், புத்தாண்டை வரவேற்கும் ’மொர்பர்த்’ திருவிழா; மணவாழ்வுக்கான,’வில் அம்பு’ சாஸ்திரம்; தங்களுடன் வாழும் கால்நடைகளாக, எருமைகளை வழிப்படும் உப்பூட்டும் விழா போன்றவை தனித்துவமாக கருத்தப்படுகின்றன. மேலும்,தங்களின் தெய்வமாக எருமையை வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகே, முத்தநாடு மந்தில், எருமைகளுக்கான,’உப்பூட்டும்’ திருவிழா கொண்டாடப்பட்டது. அதில், எருமைகள் வந்து செல்லும் புல்வெளி மைதானத்தில் பள்ளம் தோண்டி அதில் நீரை நிரப்பி உப்பு கொட்டிவைக்கப்பட்டது. ஒவ்வொருவராக தாங்கள் வளர்க்கும் எருமைகள் மற்றும் கோவில் எருமைகளை அழைத்து வந்து, உப்பு நீரை குடிக்க வைத்தனர். பின், பழங்குடியின மக்கள் அந்த நீரை புனித நீராக கருதி அனைவரும் பருகி வழிபட்டனர்.தொடர்ந்து, அங்குள்ள பாரம்பரிய கோவிலை சுற்றிலும் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினர். இந்த உப்பூட்டும் விழாவை நடத்துவதால், கால்நடைகளுக்கான நோய் பாதிப்பும் குறையும் என்பதும் இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.