சபரிமலை பந்தளத்தில் திருவாபரண தரிசனம்: மன்னர் பிரதிநிதி தேர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2017 11:01
சபரிமலை: பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணத்தை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு திருவாபரண பவனியில் வருவதற்கு மன்னர் பிரதிநிதியாக சசிகுமார் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐயப்பனை எடுத்து வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பன் சபரிமலையில் குடி கொண்ட பின்னர் ஐயப்பனை காண வந்த பந்தளம் மன்னர் அவருக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்களையும் கொண்டு வந்ததாக ஐதீகம். இந்த ஆபரணங்கள்தான் இன்றும் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு நாளின் இரண்டு நாள் முன்னதாக இந்த திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து பவனியாக புறப்படும்.பவனியில் பந்தளம் மன்னரின் பிரதிநிதியாக வர அந்த குடும்பத்தில் இருந்து இந்த ஆண்டு சசிகுமார் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போதைய பந்தளம் அரண்மனை மன்னர் ராமவர்ம ராஜாவின் பிரதிநிதியாக வருவார். கடந்த ஆண்டும் இவரே தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் மன்னர் குடும்பத்தில் நடைபெற்ற ஒரு மரணம் காரணமாக கடந்த ஆண்டு மன்னர் பிரதிநிதி ஆபரணபவனியில் வரவில்லை. வரும் 12ம் தேதி திருவாபரண பவனி புறப்படுகிறது.பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று தரிசனம் செய்கின்றனர். வரும் நாட்களில் இந்த கூட்டம் அதிகமாகும் என்று அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.