மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் பாதுகையை வணங்கி செல்லும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2017 11:01
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள வியாசமுனிவரின் பாதுகையை வலம் வந்து வணங்கி செல்கின்றனர்.
தொன்மையானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான சிவாலயங்களில் ஒன்று உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில். இங்கு மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் பாதுகை உள்ளது. அக்னி தீர்த்தக்குளம் அருகே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரத்தின் அடியில் பாதரட்சை எனப்படும் மரத்தால் செய்யப்பட்டது இந்த பாதுகை. இவை வரலாற்றின் சுவடுகளாக உள்ளதால் கோயில் நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பாதுகையை வலம்வந்து வணங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கோயில் ஸ்தானிக ஓதுவார் எம்.மாணிக்கம் கூறுகையில்: “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரத்தின் அடிப்பகுதியில் வியாசரின் பாதுகை உள்ளது. ஆடி மாத பவுர்ணமி அன்று மாலை 6:00 மணிக்கு, வேக வைக்காத பாசிப்பருப்பு, வெள்ளரிக்காய், பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியமாக படையல் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இலந்தை மரத்திற்கு பதரிகாவனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. பதரிகாவனத்தில் எப்போதும் தியான நிலையில் உருவமற்று இருப்பதாக ஐதீகம் நிலவி வருகிறது. இங்கு மாணிக்கவாசகருக்கு அஷ்டமா சித்தி கிடைத்தது. பாணாசுரன், மிருகண்டு மகிரிஷி, காகபுசுண்டர் உள்ளிட்ட முனிவர்கள் இலந்தை மரத்தில் தவயோக நிலையில் உள்ளனர்,” என்றார்.