சபரிமலை: மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு அப்பம் பிரசாதம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவசம்போர்டு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சபரிமலையில் முக்கிய வழிபாடு பிரசாதம் அப்பம். பக்தர்கள் கோயிலுக்கு வழங்கும் அரிசியில் தரமானவையை தனியாக தேர்வு செய்து அதை மூன்று முறை வெந்நீரில் சுத்தம் செய்த பின்னர் மாவாக மாற்றி அப்பம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த அப்பத்தில் கற்பூரம் கலப்பதாக கூறி உணவு தரக்கட்டுபாடு அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் பேரில் ஐகோர்ட் நியமித்த தனிஆணையர் அப்பம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் தேவசம்போர்டு மேல்முறையீடு செய்தது. அரிசி எடுக்கும் விதம், அதை சுத்தம் செய்து பயன்படுத்தும் விதம் பற்றி கேட்டறிந்த நீதிபதிகள் அப்பம் உற்பத்தியை தொடர அனுமதி வழங்கினர்.எனினும் அப்பத்தின் ஸ்டாக் அளவு குறைந்துள்ளது.
மகரவிளக்கு நெருங்கும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவசம்போர்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்ரீகோயில் அருகே பிரசாத மண்டபம், மாளிகைப்புறம் கோயில் அருகே பிரசாத கவுண்டர்களிலும் அப்பம் 24 மணி நேரமும் இடைவிடாது தயாரிக்கப்படுகிது. எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் தட்டுப்பாடு வராது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.